கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் வங்கி சேவை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் வங்கி சேவையை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் வங்கி சேவையை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தபால் நிலையத்தில் வங்கி சேவை
கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் வங்கி சேவை தொடக்க விழா நேற்று நடந்தது. தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, வங்கி சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
இந்திய தபால் துறை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.டி.எம். வசதியை தொடங்கியது. தற்போது வங்கி சேவையையும் தொடங்கி உள்ளது. இதில் பூஜ்ஜிய கையிருப்புடன் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே தபால்காரர் வந்து வங்கி சேவையை வழங்குகிறார். மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. தலைமை தபால் நிலையத்தில் தொடங்கப்பட்ட இந்த வங்கி சேவையை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
கோவில்பட்டி தபால்துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் பாஸ்கர் பேசியதாவது:-
இலவச சேவைகள்
நாட்டில் உள்ள அனைத்து தரப்பட்ட மக்களும் வங்கி சேவையை பயன்படுத்தும் வகையில் ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதன் தொடர்ச்சியாக தபால் நிலையங்களில் வங்கி சேவை தொடங்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக கோவில்பட்டி கோட்டத்தில் கோவில்பட்டி தலைமை தபால் நிலையம், லட்சுமிபுரம், கிழக்கு பாண்டவர்மங்கலம், இலுப்பையூரணி, ஜி.வி.என். கல்லூரி ஆகிய 5 தபால் நிலையங்களில் வங்கி சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த வங்கி சேவையில் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை. சேமிப்பு கணக்கை தொடங்குவதற்கு ஆதார் எண், பான் எண், செல்போன் எண் மட்டும் போதுமானது. சேமிப்பு கணக்கில் உள்ள இருப்பு தொகைக்கு ஏற்ப ஆண்டுக்கு 4 சதவீத வட்டி கணக்கிடப்பட்டு காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும். இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு தபால் நிலைய வங்கி கிளையிலும் பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். தேவையெனில் அந்த பகுதி தபால்காரரே வாடிக்கையாளரின் வீட்டுக்கு வந்து வங்கி சேவை அளிப்பார். மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன், மிஸ்டு கால் பேங்கிங், எஸ்.எம்.எஸ். பேங்கிங், ஜி.வி.ஆர். பேங்கிங், கியு.ஆர். கோடு போன்ற அனைத்து வசதிகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் அச்சையா, நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குனர் சொக்கலிங்கம், தபால் துறை உதவி கண்காணிப்பாளர்கள் முருகன், வசந்தி சிந்துதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு
நமது நாட்டின் விடுதலைக்காக போரிட்டு இன்னுயிரை இழந்த மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாள் விழா நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் கலந்து கொண்டு பூலித்தேவனின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதற்குள், மாமன்னர் பூலித்தேவன் நினைவு மாளிகையை புதுப்பிப்பதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைவில் நடைபெற இருக்கிறது.
ஆதாரம் இல்லாமல்...
நடிகர் கமல்ஹாசன், அரசியலில் அனுபவமே இல்லாமல் பேசி வருகிறார். இதுவரை எந்த துறையிலாவது லஞ்சம், ஊழல் நடந்தது என்று அவரால் நிரூபிக்க முடிந்ததா? அவர் அரசியலுக்கு வர தயாராக இருந்தால், எந்த குற்றச்சாட்டையும் ஆதாரத்துடன் கூற வேண்டும். ஆதாரம் இல்லாமல் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
திருப்பரங்குன்றம் தொகுதியில் இதுவரை நடந்த 11 தேர்தல்களில் 9 முறை அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. எனவே அங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறுவது உறுதி. திருவாரூர் தொகுதியில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிட்டதால் அக்கட்சி வெற்றி பெற முடிந்தது. இனி அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
Related Tags :
Next Story