வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் பூலித்தேவன் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை
வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் பூலித்தேவன் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
வாசுதேவநல்லூர்,
வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் பூலித்தேவன் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பூலித்தேவன் பிறந்தநாள் விழா
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும்செவலில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் விழா நடந்தது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் திறந்த வேனில் பேசினார். அவர் பேசியதாவது,
விடுதலை போராட்டத்தில் பலர் தங்கள் இன்னுயிரை இழந்து நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்துள்ளனர். இன்றைய ஆட்சியாளர்கள் அதை மறந்து விட்டு, தங்களது சுயலாபத்திற்காகவும், குடும்பத்திற்காகவும், தாங்கள் பதவியில் இருந்தால் போதும், என ஆட்சி செய்கிறார்கள். இத்தகைய மக்கள் விரும்பாத ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் என பூலித்தேவன் சிலை முன்பு சபதம் ஏற்போம். தமிழகம் தலை நிமிரவும், மக்கள் விரும்பும் திட்டம் தங்களுக்கு கிடைக்கவும், தமிழகத்தில் மீண்டும் மக்களாட்சி மலரவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆட்சி ஏற்பட வேண்டும் என்றார்.
இதில் தென்மண்டல அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா, நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் மகேஷ்வரன், தகவல் தொழில்நுட்ப மகளிர் அணி மாவட்ட செயலாளர் கவிதா, முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பால் அபிஷேகம்
பூலித்தேவனின் வாரிசான கோமதி முத்துராணி துரைச்சி தலைமையில், பூலித்தேவனின் குலதெய்வமான உள்ளமுடையார் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் 1000 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக நிறுவனர் ஏ.எம்.மூர்த்தித்தேவர் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் நயினார் பாண்டியன், மாநில பொதுச் செயலாளர் பட்டத்தேவர், மாநில தலைமை செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட செயலாளர் பட்டா கதிர், வடக்கு மாவட்ட செயலாளர் சண்முக வேலாயுதம், மேற்கு மாவட்ட செயலாளர் உதயகார்த்திக், மேற்கு மாவட்ட தலைவர் வேல்முருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் போல்தேவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.-காங்கிரஸ்
பா.ஜ.க. சார்பில் மாவட்ட பொதுச் செயலாளர் ராமராஜா தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் தலைமையிலும், தி.மு.க. சார்பில் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகச்சாமி தலைமையிலும், காங்கிரஸ் கட்சி சார்பில், வசந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமையிலும் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார், மேற்கு மாவட்ட தலைவர் பழனிநாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பூலித்தேவன் மக்கள் இயக்கம் சார்பில், பூசைத்துரை, பாண்டியராஜா, மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் சார்பில், மாநில மகளிர் அணி செயலாளர் சுந்தரச்செல்வி, தீ அமைப்பு மக்கள் தேசிய கட்சி தலைவர் ராஜா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
நடிகர் கருணாஸ்
முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு தேவர் பேரவைத் தலைவர் முத்தையா தேவர், விடுதலை முக்குலத்தோர் மக்கள் இயக்க தலைவர் விஜித்தேவர், மாமன்னர் பூலித்தேவன் மக்கள் நல இயக்க நிறுவனர் செல்வத்தேவர், பசும்பொன் தேசியக்கழக தலைவர் ஜோதிமுத்துராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதையொட்டி மதுரை தென் மண்டல ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் தலைமையில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Related Tags :
Next Story