விக்கிரமசிங்கபுரம் அருகே விவசாயி கொலையில் 2 பேர் கைது மேலும் 2 பேர் நெல்லை கோர்ட்டில் சரண்
விக்கிரமசிங்கபுரம் அருகே விவசாயி கொலையில் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் 2 பேர் நெல்லை கோர்ட்டில் சரணடைந்தனர்.
விக்கிரமசிங்கபுரம்,
விக்கிரமசிங்கபுரம் அருகே விவசாயி கொலையில் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் 2 பேர் நெல்லை கோர்ட்டில் சரணடைந்தனர்.
விவசாயி கொலை
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள காக்கநல்லூரை சேர்ந்தவர் சின்ன கருப்பன் மகன் முருகன் (வயது 27). கேரளாவில் வேலை செய்து வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊரான காக்கநல்லூருக்கு வந்தார். அப்போது முருகன், அருகே வசித்து வரும் பெண் ஒருவரிடம் பேசி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த அந்த பெண்ணின் அண்ணன் மகேஷ் (27) என்பவர் முருகனிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் முருகன் மாயமானார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை முருகனின் அண்ணன் விவசாயியான முப்பிடாதி (35) தனது மனைவி கஸ்தூரியுடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மகேஷ், கர்ணன் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் முப்பிடாதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
2 பேர் கைது
இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகீர் உசேன் தலைமையில், விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரதாபன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொலையில் அதே ஊரை சேர்ந்த முப்பிலிபாண்டி (27), செந்தில் என்ற சிவசுப்பிரமணியன் (27) ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மகேஷ் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இதில் மகேஷ், செந்தில் ஆகியோர் காக்கநல்லூரில் உள்ள சுடுகாட்டில் பதுங்கி இருப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் அங்கு சென்று 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.
இதற்கிடையே போலீசாரால் தேடப்பட்டு வந்த கர்ணன் மற்றும் முப்பிலிபாண்டி ஆகிய 2 பேரும் நேற்று நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை நீதிபதி ராமதாஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே முப்பிடாதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story