மயிலம் அருகே தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்து வாலிபர் பலி; 4 பேர் காயம்


மயிலம் அருகே தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்து வாலிபர் பலி; 4 பேர் காயம்
x
தினத்தந்தி 2 Sept 2018 4:30 AM IST (Updated: 2 Sept 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

மயிலம் அருகே தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்து வாலிபர் பலியானார். மேலும் காயமடைந்த 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

மயிலம்,

சென்னை நங்கநல்லூரில் உள்ள இளங்கோ அடிகள் தெருவை சேர்ந்தவர் முனியன் மகன் கணபதி(வயது 38). இவருடைய மனைவி சாந்தா(30). இவர்களுக்கு கவின்(4) என்கிற மகனும், ரோசிகா என்கிற மகளும் உள்ளனர். கணபதியின் அக்காள் மகன் சுபாஷ்(20).

கணபதி தனது குடும்பத்தினருடன் ஒரு காரில், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் காரில் சென்னைக்கு திரும்பினர். காரை கணபதி ஓட்டினார்.

மயிலம் அருகே பாலாப்பட்டு என்கிற இடத்தில் வந்த போது, கணபதியின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் கணபதி உள்பட 5 பேரும் காயமடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுபாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். கணபதி, சாந்தா, கவின், ரோசிகா ஆகியோருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story