சிதம்பரத்தில் சிமெண்டு சிலாப் உடைந்து கிணற்றுக்குள் விழுந்த முதியவர், தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்


சிதம்பரத்தில் சிமெண்டு சிலாப் உடைந்து கிணற்றுக்குள் விழுந்த முதியவர், தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்
x
தினத்தந்தி 2 Sept 2018 4:15 AM IST (Updated: 2 Sept 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் சிமெண்டு சிலர் உடைந்து கிணற்றுக்குள் விழுந்த முதியவரை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

சிதம்பரம்,

சிதம்பரம் விளங்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சையத் சமீர் அகமது(வயது 65). இவரது வீட்டு முன்பு சுமார் 35 அடி ஆழம் கொண்ட தரைக்கிணறு உள்ளது. இந்த கிணறு சிமெண்டு சிலாப் மூலம் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலையில் சையத் சமீர்அகமது கிணற்றின் மேல் போடப்பட்டிருந்த சிமெண்டு சிலாப் மீது ஏறி நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த சிமெண்டு சிலாப் திடீரென உடைந்து கிணற்றுக்குள் விழுந்தது. மேலும் அதில் நின்று கொண்டிருந்த சையத் சமீர் அகமதுவும் கிணற்றுக்குள் விழுந்தார். தொடர்ந்து அவர் தண்ணீரில் தத்தளித்தபடி சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த சத்தம் கேட்ட சையத் சமீர் அகமதுவின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால், சையத் சமீர் அகமதுவை மீட்க முடியவில்லை.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கயிறு மற்றும் ஏணியின் மூலமாக சையத் சமீர் அகமதுவை உயிருடன் மீட்டனர். இதில் அவரது இடது கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தால் சிதம்பரத்தில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story