கோவில் முன்பு எருதுகட்டு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி சாலை மறியல் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


கோவில் முன்பு எருதுகட்டு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி சாலை மறியல் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Sept 2018 4:30 AM IST (Updated: 2 Sept 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

ஆவுடையார்கோவில் அருகே கோவில் திருவிழாவையொட்டி கோவில் முன்பு எருது கட்டு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவுடையார்கோவில்,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்துள்ள பேயாடிக்கோட்டையில் திருவேட்டழகிய அய்யனார் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவின் 3-ம் நாள் நடக்கும் எருதுகட்டும் நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றதாகும். திருவிழாவின்போது இந்த கோவிலுக்கு ஏராளமான கோழி, ஆடு, மாடுகளை பக்தர்கள் காணிக்கையாக வழங்குவார்கள். அவற்றை ஏலம் விடுவதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரு சமூகத்தினருக்கும் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக இந்த கோவிலில் திருவிழா நடைபெறவில்லை.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடித் திருவிழாவை நடத்த தங்களுக்கு அனுமதி வழங்குமாறு, ஒரு தரப்பினர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதை எதிர்த்து மற்றொரு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, திருவேட்டழகிய அய்யனார் கோவில் திருவிழாவை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தலைமையில், போலீஸ் பாதுகாப்புடன் காப்பு கட்டி, 3 நாட்கள் திருவிழா நடத்த உத்தரவிட்டார். அதன்படி இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் வேணுகோபாலுக்கு காப்பு கட்டி திருவிழா தொடங்கியது. இதற்கிடையே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று 3-ம் நாள் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே எருதுகட்டும் நிகழ்ச்சி நடத்த ஒரு தரப்பினர் மதுரை ஐகோர்ட்டில் அனுமதி பெற்றனர். அவர்கள் பராம்பரிய வழக்கப்படி கோவில் அருகே எருதுகட்டும் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தனர். ஆனால் இந்து சமய அறநிலையத்துறையினர், தங்களுக்கு கோர்ட்டு வழங்கிய உத்தரவில் எருது கட்டு தொடர்பான எந்த உத்தரவும் அளிக்கவில்லை, அதனால் கோவிலுக்கு அருகே எருதுகட்டு நடத்தக்கூடாது என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து அந்த தரப்பினர் வேறு ஒரு இடத்தில் எருதுகட்டு நடத்துவது குறித்து பறையத்துார் கிராமத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். ஆலோசனையை தொடர்ந்து, எருதுகட்டு நிகழ்ச்சியை வழக்கம்போல கோவில் அருகிலேயே நடத்த வேண்டும், அதற்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும், என்று வலியுறுத்தினர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததால், அப்பகுதி மக்கள் திடீரென்று பறையத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் நடந்தபோது அப் பகுதியை சேர்ந்த ஒருவர் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி, திருவேட்டழகிய அய்யனார் கோவில் அருகே எருதுகட்டும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றார். உடனே போலீசார் அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறித்து, உடலில் தண்ணீரை ஊற்றி தீக்குளிப்பதை தடுத்தனர்.

இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், ஆவுடையார்கோவில் தாசில்தார் ஜமுனா மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் எருது கட்டும் நிகழ்ச்சி தொடர்பாக அப்பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற் படாமல் இருக்க புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், துணை சூப்பிரண்டுகள் அறந்தாங்கி தெட்சிணாமூர்த்தி, கோட்டைப்பட்டினம் காமராசு மற்றும் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story