திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்க வேண்டும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டத்தில் தீர்மானம்
திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி,
திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் அண்டனி எட்வர்டு யூனின் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் சற்குணராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் மங்களாவதி ஜெயமர்ஜினா, மாநில தனியார் பள்ளி செயலாளர் வாலன்டின் இளங்கோ ஆகியோர் பேசினர்.
தீர்மானங்கள்
கூட்டத்தில், திருச்செந்தூரை மையமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கு தேர்வுப்பணி மற்றும் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்க வேண்டும். மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு பொதுத்தேர்வு அரசு பொதுத்தேர்வாக உள்ளது. இதனால் முதுநிலை ஆசிரியர்களுக்கு பணிச்சுமையும், கூடுதல் பொறுப்பும் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு பயிற்சி வழங்குவதற்காக குறிப்பிட்ட சில ஆசிரியர்களை மட்டும் ஆண்டு முழுவதும் பயன்படுத்துவதால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் சார்ந்த பள்ளி மாணவர்களின் நலன் மற்றும் கல்வி பாதிக்கப்படுகிறது. ஆகையால் அனைத்து பள்ளிகள் சார்ந்த முதுநிலை ஆசிரியர்களுக்கும் நீட் தேர்வு பயிற்சி பணியை பகிர்ந்து அளிக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தி உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தலைமை ஆசிரியர் ஆல்பர்ட், மாவட்ட செயலாளர் மூக்கையா, மாநில இணை செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சட்ட செயலாளர் வயணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story