ஹெல்மெட் அணிந்து வழிப்பறியில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும், கவர்னரிடம் வலியுறுத்தல்


ஹெல்மெட் அணிந்து வழிப்பறியில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும், கவர்னரிடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Sept 2018 4:30 AM IST (Updated: 2 Sept 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்து வழிப்பறியில் ஈடுபடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடியிடம் வியாபாரிகள் வலியுறுத்தினார்கள்.

பாகூர்,

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக புதுவை மாநில கவர்னர் கிரண்பெடி பள்ளி மாணவர்கள் சுமார் 50 பேருடன் சைக்கிளில் ஊர்வலமாக சென்றார். கவர்னர் மாளிகையில் இருந்து தவளக்குப்பத்துக்கு இந்த ஊர்வலம் சென்றது.

பின்னர் கவர்னர் அங்குள்ள அரவிந்த் கண் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் மாணவர்கள், வியாபாரிகளிடம் கலந்துரையாடினார்.

அப்போது ஒரு மாணவி பேசும்போது, ‘‘கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று நீங்கள் (கவர்னர்) உத்தரவு பிறப்பித்தீர்கள். ஆனால் முதல்–அமைச்சர் நாராயணசாமி ஹெல்மெட் அணிவது கட்டாயம் இல்லை, விருப்பம் உள்ளவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்லலாம் என்று கூறியுள்ளாரே என்று கவர்னரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கவர்னர், இது குறித்து முதல்–அமைச்சரிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து தவளக்குப்பம் வியாபாரிகள் சங்க பிரதிநிதி குமார் பேசும்போது, ‘‘விபத்தில் உயிர் இழப்புகளை தடுக்க, இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது அவசியம்தான். அதேசமயம் ஹெல்மெட் அணிந்து வழிப்பறி சம்பவங்களும் நடக்கின்றன. அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனையில் நடைபெற்ற கண்தான இருவார விழாவில், கவர்னர் கிரண்பெடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிகளில் வணிகவரித்துறை ஆணையர் ஸ்ரீநிவாஸ், அரவிந்த் கண் ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story