மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும் 6 யானைகளின் கஜபயணம் இன்று தொடக்கம் மந்திரி ஜி.டி.தேவேகவுடா தொடங்கிவைக்கிறார்


மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும் 6 யானைகளின் கஜபயணம் இன்று தொடக்கம் மந்திரி ஜி.டி.தேவேகவுடா தொடங்கிவைக்கிறார்
x
தினத்தந்தி 2 Sept 2018 3:30 AM IST (Updated: 2 Sept 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும் 6 யானைகளின் கஜபயணம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதனை மந்திரி ஜி.டி.தேவேகவுடா தொடங்கிவைக்கிறார்.

மைசூரு, 

மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும் 6 யானைகளின் கஜபயணம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதனை மந்திரி ஜி.டி.தேவேகவுடா தொடங்கிவைக்கிறார்.

மைசூரு தசரா விழா

மைசூருவில் உலகபுகழ்பெற்ற தசரா விழா ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை மைசூரு தசரா விழா கொண்டாடப்படுகிறது. குடகு, தட்சிணகன்னடா மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு தசரா விழாவை எளிமையாக கொண்டாட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியாக 19-ந்தேதி ஜம்புசவாரி என்னும் யானைகள் ஊர்வலம் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள முகாம்களில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகள் மைசூருவுக்கு அழைத்துச்செல்லப்படும். இந்த நிகழ்வு கஜபயணம் என அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் தசரா விழாவில் கலந்துகொள்ளும் யானைகள் மைசூருவுக்கு அழைத்துச்செல்லப்படும். முதற்கட்ட கஜபயணம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா நாகரஒலே வனப்பகுதி அருகே வீரன ஒசஹள்ளி கிராமத்தில் இருந்து தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா உள்பட 6 யானைகள் மைசூருவுக்கு அழைத்துச் செல்லப்படுகிறது.

ஆனேகாடு முகாமில் 3 யானைகள்

இந்த நிலையில் முதற்கட்ட கஜபயணம் செல்ல குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா குசால்நகர் அருகே ஆனேகாடு என்ற முகாமில் இருந்து 3 யானைகள் நேற்று மைசூருவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. அதுபோல் ராமநகர், நாகரஒலே முகாம்களில் இருந்தும் யானைகள் வீரனஒசஹள்ளிக்கு வந்துள்ளன.

தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா, அபிமன்யூ, தனஞ்செயா, காவேரி, விஜயா, ஷைத்ரா ஆகிய 6 யானைகள் முதற்கட்டமாக இன்று காலை 11.30 மணி அளவில் கஜபயணமாக மைசூருவுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

மந்திரி தொடங்கிவைக்கிறார்

இதையொட்டி யானைகள் குளிப்பாட்டி அலங்கரிக்கப்படும். அந்த யானைகளுக்கு பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு பூஜை நடத்தி, மலர் தூவி மாநில உயர்கல்வித் துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான ஜி.டி.தேவேகவுடா கஜபயணத்தை தொடங்கிவைக்கிறார். நிகழ்ச்சியில், மந்திரி சா.ரா.மகேஷ், ஜனதாதளம் (எஸ்) கட்சி மாநில தலைவரும், எம்.எல்.ஏ.வுமான எச்.விஸ்வநாத், கலெக்டர் அபிராம் ஜி. சங்கர் மற்றும் வனத்துறையினர் கலந்துகொள்கிறார்கள்.

இதையொட்டி வீரனஒசஹள்ளி கிராமத்தில் மலைவாழ் மக்கள் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கஜபயணம் தொடங்கும் யானைகள் சிறிது தூரம் நடைபயணமாக அழைத்து வரப்படுகிறது. பின்னர் லாரிகளில் ஏற்றி 6 யானைகளும் மைசூரு அசோகபுரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கிருந்து 6 யானைகளும் நாளை (திங்கட்கிழமை) மைசூரு அரண்மனைக்கு அழைத்து வரப்படுகிறது. அரண்மனை சம்பிரதாய முறைப்படி அரண்மனை முக்கிய வாயில் முன்பு சிறப்பு பூஜை செலுத்தி யானைகள் அழைத்துவரப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தசரா விழா கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.

Next Story