மாவட்டத்தில் 5 சட்டசபை தொகுதிகளில் 11,84,390 வாக்காளர்கள் வரைவு பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்


மாவட்டத்தில் 5 சட்டசபை தொகுதிகளில் 11,84,390 வாக்காளர்கள் வரைவு பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 1 Sep 2018 10:45 PM GMT (Updated: 1 Sep 2018 9:33 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் 5 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் மலர்விழி வெளியிட்டார். இதன்படி 11,84,390 வாக்காளர்கள் உள்ளனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடும் நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் வரைவு வாக்காளர் பட்டியலை பெற்றுக்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், உதவி கலெக்டர் சிவன்அருள் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியலின் பிரதிகள் வழங்கப்பட்டன.

அப்போது கலெக்டர் மலர்விழி நிருபர்களிடம் கூறியதாவது:–

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 10.1.2018 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 1.1.2018–ந்தேதியை தகுதிநாளாக கொண்டு கடந்த 11.1.2018 முதல் 30.8.2018 வரை 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் விடுபட்டவர்களிடம் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் உரிய விசாரணைக்கு பின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களில் இறந்துபோனவர்கள், குடிபெயர்ந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இதேபோல் இருமுறை வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவானவர்களின் ஒரு பதிவு நீக்கம் செய்யப்பட்டது. ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களில் பதிவுகளில் திருத்தம் செய்யக்கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களை விசாரணை செய்து திருத்தம் செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2,848 பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வருகிற 31.10.2018 வரை வைக்கப்படும். பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ளலாம். வருகிற 9–ந் தேதி 23–ந் தேதி, அக்டோபர் மாதம் 7–ந் தேதி மற்றும் 14–ந் தேதி ஆகிய 4 நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.

1.1.2019 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்க படிவம் எண்–6–ல் அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று ஒருவர் இடம் பெயர்ந்து இருந்தாலோ, இறந்து போயிருந்தாலோ, படிவம் எண் 7–லும், பதிவில் ஏதேனும் திருத்தம் தேவைப்பட்டால் படிவம்–8–லும், முகவரி மாற்றம் செய்ய படிவம் 8–ஏ–விலும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பேசுகையில், மலைகிராமங்களில் வெவ்வேறு இடங்களில் உள்ள வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்ல 5 கி.மீ.வரை பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. இத்தகைய பகுதிகளில் வாக்காளர்களுக்கு இடையூறு ஏற்படமால் இருக்க புதிய வாக்குச்சாவடிகளை உருவாக்க வேண்டும். 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து தனியாக புதிய வாக்குச்சாவடிகளை உருவாக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் உள்ள 1,427 வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் கோவி.சிற்றரசு (காங்கிரஸ்), பொன்மகேஸ்வரன் (தி.மு.க.), டாக்டர் இளங்கோவன், தம்பி ஜெய்சங்கர் (தே.மு.தி.க.) உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story