சமூக வலைத்தளத்தில் போலீசாரை தவறாக சித்தரித்தவர் கைது


சமூக வலைத்தளத்தில் போலீசாரை தவறாக சித்தரித்தவர் கைது
x
தினத்தந்தி 2 Sept 2018 4:56 AM IST (Updated: 2 Sept 2018 4:56 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தளத்தில் போலீசாரை தவறாக சித்தரித்தவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை தியாகராயநகர் பஸ் நிலையத்தில் கடந்த மாதம் 26-ந்தேதி கார்த்தி என்ற ஆண் காவலரும், அமிர்தவல்லி என்ற பெண் போலீசும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். இதனை வாலிபர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் அவதூறாக பதிவிட்டார்.

இதுதொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தியாகராயநகர் பஸ்நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது போலீசாரை செல்போனில் படம் பிடித்த நபர் அடையாளம் காணப்பட்டார்.

அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி கிண்டி மடுவங்கரை பகுதியை சேர்ந்த சுதிஷ்(வயது 28) என்ற வாலிபரை கைது செய்தனர். ஆனால் அவர் போலீசாரை தவறாக சித்தரிக்கவில்லை என்பதும், அவருடைய சகோதரர் சுகிஷ்(28) தான் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

சுகிசும், சுதிசும் இரட்டை சகோதரர்கள். இருவரும் ஒரே மாதிரி தோற்றத்தில் இருந்ததால் போலீசார் குழப்பத்தில் தவறுதலாக கைது நடவடிக்கை எடுத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சுதிஷை விடுவித்து சுகிசை போலீசார் கைது செய்தனர்.

Next Story