தினம் ஒரு தகவல் : போர்க்குணம் இல்லாததால் அழிந்த பறவை இனம்


தினம் ஒரு தகவல் : போர்க்குணம் இல்லாததால் அழிந்த பறவை இனம்
x
தினத்தந்தி 2 Sept 2018 11:07 AM IST (Updated: 2 Sept 2018 11:07 AM IST)
t-max-icont-min-icon

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை பூமியில் வாழ்ந்த ஒரு அதிசயப் பறவை ‘டூடூ’. ஆனால், இன்றைக்கு அந்த அதிசய பறவையினம், உயிரினங்கள் அழிவுக்கான குறியீடாக மாறிவிட்டது.

 ‘டூடூ போல் சாகாதே’ என்னும் பழமொழி ஆங்கிலத்தில் உண்டு. மிக மிக சாதுவான பறவையாக அவை இருந்ததுதான் அழிந்ததற்கு காரணமாக இருக்கலாம்.

‘டூடூ’ மனிதர்களை கண்டு அஞ்சி ஓடாத பறவையாக இருந்திருக்கிறது. பார்ப்பதற்கு மிகப்பெரிய உருவ அமைப்பை கொண்டிருந்தாலும் காண்பதற்கு நட்பான பறவையாகவும் அது இருந்துள்ளது. இதனால் ‘டூடூ’வை கேலிக்குரிய பறவையாக பார்த்திருக்கிறார்கள்.

பறக்க இயலாத சிறிய சிறகினை கொண்ட பறவை இது. எனவே ஆபத்து வந்தால்கூட ‘டூடூ’ மிக எளிதில் சிக்கிவிடும். எதிர்த்து சண்டையும் இடுவதில்லை. ‘டூடூ’வின் அழிவைப்பற்றி குறிப்பிடுகையில், “போர்க்குணம் இல்லாத எந்த இனமும் காலமாற்றத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து போக நேரிடும்” என்கிறார்கள் உயிரின ஆர்வலர்கள்.

இந்திய பெருங்கடலில் மொரீஷியஸ் என்னும் அழகிய தீவைப் பூர்வீகமாகக் கொண்டது ‘டூடூ’. இந்த தீவில் பல ஆண்டு காலத்துக்கு மனிதர்களே இல்லை. மனிதர்கள் காலடி படாதவரை ‘டூடூ’க்கள் இங்கு பெருமளவில் செழித்து வாழ்ந்திருக் கின்றன. முதன்முதலில் கடல் மூலம் இந்தத் தீவுக்கு வந்த அரேபியர்கள் ஓய்வு எடுப்பதற்காக இறங் கியுள்ளனர்.

அடுத்து, 1507-ம் ஆண்டில் போர்ச்சுக்கீசியர்கள் இந்த தீவுக்கு வந்து தங்கியுள்ளார்கள். இவர்கள்தான் ‘டூடூ’வை முதலில் கண்டுபிடித்ததாக சொல்லப்படுகிறது. ‘டூடூ’ என்ற பெயரை அவர்கள்தான் இட்டிருக்க வேண்டும். இந்த பெயருக்கு போர்ச்சுக்கீசிய மொழியில் ‘முட்டாள்‘ என அர்த்தம் உள்ளதாக சொல்கிறார்கள். இதனால் ‘டூடூ’-க்கு ‘முட்டாள் பறவை’ என்ற பெயரும் உண்டு. ஆனால், 1598-ல் மொரீஷியஸ் தீவுக்கு வந்த டச்சுக்காரர்கள்தாம் ‘டூடூ’வை கண்டுபிடித்ததாக மற்றொரு வரலாற்று குறிப்பும் சொல்கிறது.

‘டூடூ’ சண்டையிடும் இயல்பு இல்லாத பறவை. புற்களால் கூடு அமைத்து உயிர்வாழ்ந்தது. அது இட்ட முட்டைகள், விலங்குகளால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டன. டூடூவின் எண்ணிக்கை சட்டெனக் குறைந்தது. 1680-ம் ஆண்டுக்குள் அவை முற்றிலும் அழிந்துவிட்டன. ஓவியர் ரோலண்ட் சாவ்ரே என்பவர் 1624-ல் ‘டூடூ’வை படமாக தீட்டியுள்ளார். இதுதான் ‘டூடூ’வை தெரிந்துகொள்வதற்கான முதல் சாட்சியாக இருந்தது. அதன் பிறகு பலரும் ஓவியங்களில் ‘டூடூ’வை பதிவுசெய்துள்ளனர்.

ஓவியங்களின் அடிப்படையில் பார்த்தால், அதன் உடல் சாம்பல் நிறத்திலும், கால்கள் மஞ்சள் நிறத்திலும் உள்ளன. ‘டூடூ’ வாழ்ந்த காலத்தில் அது குறித்த விழிப்புணர்வு இல்லாததால், அது தடமே இல்லாமல் எலும்பு துண்டுகள்கூட மிஞ்சாமல் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்பது, வேதனையான விஷயம் ஆகும். 

Next Story