ஓவிய ரெயில்


ஓவிய ரெயில்
x
தினத்தந்தி 2 Sept 2018 1:27 PM IST (Updated: 2 Sept 2018 1:27 PM IST)
t-max-icont-min-icon

நீண்டகாலமாகவே ரெயில் பெட்டிகளை நீல நிற வண்ணங்கள்தான் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. அவை ரெயில்வேயின் பாரம்பரியங்களுள் ஒன்றாகவே பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன.

சமீபகாலமாக ஒருசில ரெயில்கள் வடிவமைப்பிலும், நிறங்களிலும் மாறுபட்டு காட்சியளிக்க தொடங்கி இருக்கின்றன. அந்த வகையில் பீகாரில் ஓடும் ரெயில் ஒன்று பாரம்பரிய கலையை பிரதிபலிக்கும் சித்திரங்களுடன் அழகுற வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்த ரெயிலின் பெயர் பீகார் சம்பர்க் கிராந்தி. இது துர்பங்கா -புதுடெல்லி இடையே இயக்கப்படுகிறது.

இந்த ரெயிலின் 9 பெட்டிகளை அந்த மாநிலத்தின் பாரம்பரிய கலையான மதுபானி ஓவிய வடிவம் அழகுபடுத்திக்கொண்டிருக்கிறது. தோகை விரித்தாடும் மயில், தண்ணீரில் துள்ளும் மீன்கள், பசுமாடுகள், பூ வேலைப்பாடுகள், பெண்கள் உடுத்தும் பாரம்பரிய உடைகளை பிரதிபலிக்கும் சித்திரங்கள் என பயணிகளை கவரும் வகையில் பட்டை தீட்டப்பட்டிருக்கின்றன.

இந்த ஓவிய சித்திரங்களை பெண்களே வடிவமைத்திருக்கிறார்கள். அதனால் ஆங்காங்கே பெண்களின் சித்திரங்கள் பாரம்பரிய அம்சங்களை தாங்கியபடி பிரதிபலித்துக்கொண்டிருக்கின்றன.

இதுபற்றி ரெயில்வே அதிகாரி் கூறுகையில், ‘‘இந்த ஓவிய படைப்புகளை 30 பெண்கள் 4 நாட்களில் வரைந்திருக்கிறார்கள். மத்திய கிழக்கு ரெயில்வேயில் முதன் முதலாக இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. உள்ளூர் கலைகளுக்கு உயிரோட்டம் கொடுக்கும் வகையிலும், அவைகளின் பாரம்பரிய பெருமைகளை பயணிகள் அறிந்து கொள்ளும் வகையிலும் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய பாரம்பரிய கலை வடிவங்களை ரெயில் பெட்டிகளில் பதிப்பதன் மூலம் அவை நாடு முழுவதும் எளிதாக சென்றடைந்துவிடும்.

பயணிகளின் மனதிலும் இடம்பிடித்துவிடும். இந்த முயற்சிக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் மேலும் சில ரெயில்களில் பாரம்பரிய கலையம்சங்களை இடம்பெற செய்வது பற்றி ஆலோசித்துவருகிறோம். கிராமிய சூழல், போக்குவரத்து கட்டமைப்பு, வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வு, அந்தந்த பகுதியில் வசிக்கும் மக்களின் பழக்கவழக்கங்கள் போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் சித்திரங்கள் இடம் பெறும்’’ என்கிறார்கள். 

Next Story