பஞ்ச கல்யாணியும்.. ஒன்பது சுழி ரகசியங்களும்.. (குதிரை சந்தையில் குஷியான காட்சிகள்)


பஞ்ச கல்யாணியும்.. ஒன்பது சுழி ரகசியங்களும்.. (குதிரை சந்தையில் குஷியான காட்சிகள்)
x
தினத்தந்தி 2 Sept 2018 2:49 PM IST (Updated: 2 Sept 2018 2:49 PM IST)
t-max-icont-min-icon

குதிரை என்று கூறும்போதே குரலில் கம்பீரம் தோன்றுகிறது. கட்டழகும், கம்பீரமும் கொண்ட குதிரைகளைதான் கடவுளும், மன்னர்களும் தங்கள் ரதங்களை ஓட்ட பயன்படுத்தி இருக்கிறார்கள்.

மன்னர்கள் தங்கள் படைகளின் முக்கிய பலமாக கருதியதும் குதிரைகளைத்தான். போர்க்களத்தில்தான் அவைகளின் முழு ஆற்றலும் வெளியே தெரியும். சமயோசிதமாகவும் நடந்துகொள்ளும். அதனால்தான் மகாராஜா ராணா பிரதாப் சிங்கின் குதிரையான சேத்தக் இன்றும் வரலாற்றில் வாழ்கிறது. மைசூர் மன்னர் ஹைதர் அலி தனது படைக்கு தேவையான குதிரைகளை தேர்வு செய்வதற்காகவே குதிரை சந்தையை உருவாக்கினார். 18-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இந்த குதிரை சந்தை இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்பது ஆச்சரியம்தானே! இந்த ஆச்சரியத்தை காண வேண்டும் என்றால் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதிக்கு செல்ல வேண்டும்.

புதுப்பாளையம் கிராமத்தில் மிகப்பழமையான குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆடிப்பெருந்தேர் திருவிழா ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் 4 நாட்கள் நடக்கிறது. இந்த திருவிழாவையொட்டிதான் புகழ்பெற்ற குதிரைச்சந்தையும் நடந்து வருகிறது. இந்த ஆண்டும் சமீபத்தில் நடந்து முடிந்தது.

ஈரோடு, நாமக்கல், கோவை, கரூர், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கர்நாடக பகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குதிரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. மட்டை குதிரை, போனி குதிரை போன்ற சாதாரண வேலைகள் செய்யும் குதிரைகள் மட்டுமின்றி, கம்பீரமான குதிரைகளும் இந்த சந்தையில் அணி வகுத்து நின்றிருந்தன. இங்கு வந்த குதிரைகளில் அனைவரையும் கவர்ந்தது, கத்தியவார் குதிரைகள்தான். கத்தியவார் என்பது குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில எல்லைப்பகுதியில் இருக்கும் பகுதி. இந்த பகுதியை பூர்வீகமாக கொண்டவை கத்தியவார் குதிரைகள் என்று அழைக்கப்படுகின்றன. இதுபோன்று மார்வார் என்ற பகுதியை பூர்வீகமாக கொண்டவை மார்வார் குதிரைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 2 வகை குதிரைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோன்றுகின்றன.

இந்த குதிரைகளை அதன் நிறத்தைவைத்து ரகம் பிரிக்கிறார்கள். சுத்த வெள்ளையாக இருக்கும் குதிரைகள் நொக்ரா என்று அழைக்கப்படுகின்றன. இந்த குதிரைகள் பார்ப்பதற்கே கொள்ளை அழகாக இருக்கின்றன. செவலையில் வெள்ளை நிறம் ஆங்காங்கே இருந்தால் பஞ்சகல்யாணி, வெள்ளையில் கருப்பு நிறம் ஆங்காங்கே இருந்தால் கருப்பு சட்டை, கருப்பு நிறத்தில் ஆங்காங்கே வெள்ளை நிறம் இருந்தால் வெள்ளை சட்டை என்றும் அழைக்கப்படுகின்றன. சுத்த கருப்பு நிறமும் உள்ளது. நிறத்தைவைத்து ரகம் பிரித்தாலும், கத்தியவார் குதிரைகளைத்தான் நமது விருப்பத்துக்கு ஏற்ப வேலை வாங்க பழக்க முடியும். எனவே மார்வார் குதிரைகளை விட கத்தியவார் குதிரைகளுக்கே மவுசு அதிகம் உள்ளது. இந்த ரக குதிரைகள்தான் சாகசங்கள், நடனம் ஆடும் பயிற்சிக்கு ஏற்றவையாகும்.



குதிரைகள் பொதுவாக வசீகரத்தை அளிப்பவை. அதை பார்த்தாலும், அதை தொட்டாலும் நமக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் குதிரைகள் வளர்ப்பதற்காக வாங்கும்போது சில நடைமுறைகளை பார்த்துதான் வாங்குகிறார்கள். அந்த ரகசியம் நன்கு பழக்கப்பட்டவர்களுக்கு தெரியும். அந்தியூர் குதிரை சந்தையை பொறுத்தவரை அங்கு குதிரைகள் கொண்டு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். குதிரை வளர்ப்பினை மகிழ்ச்சிக்காக செய்பவர்கள். பலர் கவுரவத்துக்காக குதிரைகள் வளர்ப்பவர்கள். இவர்கள் தங்கள் குதிரைகளை பொதுமக்கள் பார்வைக்காக கொண்டு வருவதுடன், குதிரை வளர்ப்பு குறித்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறார்கள். குதிரைகளை தேர்ந்தெடுத்து வாங்க ஆலோசனைகளையும் தருகிறார்கள்.

குதிரைகள் வாங்கும்போது சுழிகள் பார்த்து வாங்க வேண்டும். முகத்தில் மூன்று, கழுத்து பிடரியில் இரண்டு, கால்களில் தலா ஒன்று என 9 சுழிகள் இருப்பது சுத்த சுழிகளாகும்.

இதுதவிர கழுத்து பகுதியில் சுழிகள் இருந்தால் அதை ராஜா, மந்திரி சுழி என்கிறார்கள். இந்த சுழிகள் இருக்கும் குதிரைகளை வாங்கினால் நல்ல யோகம்தானாம். முழங்காலுக்கு கீழும், வயிற்று ஓரப்பகுதியிலும் இருந்தால் அது சுத்த சுழி கிடையாது. சுத்த சுழி இல்லாத குதிரைகள் பெரும்பாலும் விற்பனையாவது இல்லை.

குதிரைகள் 65 அங்குலம் உயரம் வரை வளரும். இந்த ஆண்டு வந்திருந்த நொக்ரா பெண் குதிரை 62 அங்குலம் வளர்ந்திருந்தது. முன்பு சிறந்த குதிரைகளை கொண்டு வருபவர்கள், அதனை பிரபலப்படுத்துவதற்காக ரூ.25 லட்சம் வரை விலை சொல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு அதுபோன்று அதிக விலையை யாரும் கூறவில்லை. ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை மட்டுமே விலை கூறினார்கள்.

ஹைதர் அலியின் காலத்தில் இந்த சந்தை தொடங்கப்பட்டிருந்தாலும் 1929-ம் ஆண்டு இதை முறைப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்கள் வகுத்த நெறிப்படி இந்த சந்தை நடத்தப்படுகிறது. சந்தைக்காக புதுப்பாளையம் பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களை கூட விட்டுக்கொடுக்கிறார்கள். குதிரை சந்தை நடைபெறும் காலம் தவிர மற்ற நேரங்களில் அது விவசாய நிலமாக இருக்கும்.

குதிரை சந்தை என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் சமீபகாலமாக நாட்டு மாடுகள் அதிகம் கொண்டு வரப்படும் சந்தையாக இது உள்ளது. காங்கேயம் மாடுகள், பர்கூர் இன மாடுகள் இங்கு அதிகம் கொண்டுவரப்படும். குறிப்பாக வெளி மாநில நாட்டு மாடுகளாக ஓங்கோல், கிர் ஆகியவற்றை இங்கு அதிகமாக பார்க்க முடிகிறது. ஓங்கோல் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டது. கிர் மாடுகள் குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவை. இந்த மாடுகள் சுமார் 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள். நாட்டு இன பசுக்களிலேயே அதிகம் பால் கறக்கும் இனமாக கிர் உள்ளது. தினசரி 10 லிட்டர்வரை கிர் மாடுகளில் இருந்து பால் கறக்க முடியும். இதுபோல் காங்கிரிஜ், ரெட்சிந்தி, சாகிவால், ராத்தி என்ற பஞ்சாப் மாநில நாட்டு மாடுகளையும் இங்கு பார்க்க முடிந்தது.

நமது நாட்டு பாரம்பரிய வேட்டை நாய்களாக இருந்த பல இனங்கள் அழிந்து விட்டன. அவற்றை மீட்டு எடுக்கும் பணியில் பலர் அக்கறைகொண்டிருக்கிறார்கள். அவ்வாறு மீட்கப்பட்டு தற்போது இனப்பெருக்கம் செய்யப்பட்டு வரும் முதலகவுண்ட், கன்னிங், சிப்பல்பரை, ராம் பிரவுன், கேரவன் போன்ற வேட்டை நாய்கள் அந்தியூர் சந்தையில் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தன.

தென் ஆப்பிரிக்க நாட்டை பூர்வீகமாக கொண்ட போயர் ஆடுகள், நீண்ட காதுகள் கொண்ட ஜமுனாபாரி என்ற ஆடு வகைகளும், கடக்நாத் எனப்படும் கருஞ்சதை கோழிகளும் இங்கு கொண்டுவரப்பட்டு இருந்தன.

குதிரை சாகச வீரர்கள் தங்கள் திறமையை காட்டும் வகையில் அங்கேயே குதிரையேற்ற சாகசம், ரேக்ளா வண்டி சாகசம் ஆகியவற்றையும் செய்து காட்டினார்கள்.

பொதுமக்களை எப்போதும் வெகுவாக கவர்வது நடனம் ஆடும் குதிரைகள்தான். இசைக்கு ஏற்ப 4 கால்களையும் அசைத்து ஆடும் குதிரைகள் 2 கால்களில் நின்று கொண்டு ஆடும் குதிரைகள், 4 சதுர அடி கட்டிலில் நின்று கொண்டு ஆடும் குதிரைகள் என்று வியக்க வைக்கும் குதிரைகளின் பின்னால் சென்று அவற்றை தொட்டுப்பார்க்க விரும்பும் பார்வையாளர்கள் அதிகம். கரு கரு என்று சுத்த கருப்பாக இருக்கும் குதிரைகளின் முன்பு நின்று கொண்டு செல்பி எடுக்கும் குதிரை பிரியர்கள், ஆ... இவ்ளோ குதிரைகளா என்று ஆச்சரியப்படும் குழந்தைகள்.. அதே வார்த்தைகளை அழகிய கண்களை விரித்து காட்டும் கன்னிப் பெண்கள் என்று புழுதிக்குள்ளும் அழகாகவே இருக்கிறது குதிரை சந்தை.

இந்த சந்தையை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்தார்கள். வடமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து குதிரைகள் வாங்கிச்சென்றார்கள்.

குதிரைகளையும், மாடுகளையும், ஆடுகளையும் பார்வையிடும் சந்தையாக இருந்தாலும் ஜாதி மத வேறுபாடுகள் இல்லாத தேசிய ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் ஒரு விழாவாகவே அந்தியூர் குருநாதசாமி கோவில் குதிரைச்சந்தை திகழ்கிறது. ஒரு முறை இந்த சந்தையை பார்ப்பவர்கள், அடுத்த ஆண்டு எப்போது வரும் என்று ஏங்குவது வழக்கம். 

Next Story