பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை..


பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை..
x
தினத்தந்தி 2 Sept 2018 3:04 PM IST (Updated: 2 Sept 2018 3:04 PM IST)
t-max-icont-min-icon

“தங்கள் குழந்தைகள் அனைவரும் ஆரோக்கியமானவர்களாக இருக்கவேண்டும் என்று எல்லா பெற்றோர்களும் ஆசைப்படுகிறார்கள்.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கீரை வகைகளை சாப்பிட விரும்பாதபோது, அன்பாக கொஞ்சி அரவணைத்து எப்படியாவது ஒரு ஸ்பூன் கீரை பொரியலையாவது ஊட்டிவிட்டுவிடுகிறார்கள். அதன் மூலம் அவர்களுக்கு சத்தான உணவினை கொடுத்துவிட்டோம் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள்.

உண்மையில் நாம் அப்படி ஊட்டிவிடும் கீரையில்கூட விஷம் இருக்கிறது. இன்று கிடைக்கும் பெருமளவு கீரைகள் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டுதான் அறுவடை செய்யப்படுகின்றன. அவைகளை தண்ணீரில் நன்கு கழுவி சமையல் செய்தாலும் அதில் விஷத்தன்மை இருக்கத்தான் செய்கிறது. அது தெரியாமல் நம் பிள்ளைகளுக்கு நாமே ரசாயனத்தை ஊட்டி விடுகிறோம்’’ என்று மனம் குமுறுகிறார், சேலம் குரங்குச்சாவடியை சேர்ந்த 54 வயதான இயற்கை ஆர்வலர் அல்லி.

இவர் தனது குடும்பத்தார் ரசாயனம் கலந்த உணவுகளை உண்டுவிடக்கூடாது என்பதற்காக, தங்களுக்கு தேவைப்படும் கீரை, காய்கறிகளை விளைவிக்க வீட்டையே ஒரு பசுமைத் தோட்டமாக உருவாக்கியிருக்கிறார். அதில் கத்தரி, தக்காளி, புடலை, வெண்டைக்காய், மிளகாய், கீரை வகைகள் செழித்து வளருகின்றன.

‘இப்போது விளைவிக்கப்படும் பெரும்பாலான காய்கறிகளில் ரசாயனதாக்கம் இருப்பதாக உங்களால் எப்படி உறுதிபட கூற முடிகிறது?’ என்று அல்லியிடம் கேட்டால், அதற்கும் விளக்கம் தருகிறார்.

“முன்பெல்லாம் நாட்டு தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் ஆகியவற்றை தோட்டத்தில் இருந்து அறுவடைசெய்து வீட்டில் 2 நாட்கள் வைத்திருந்தாலே அவை அழுகிவிடும். ஆனால் இன்று நாம் கடைகளில் வாங்கி வரும் தக்காளிப் பழங்கள், கத்தரிக்காய், பூசணிக்காய் உள்ளிட்டவைகளை வெளியே கொட்டிவைத்திருந்தால் ஒரு வாரத்துக்கு மேல்கூட அப்படியே இருக்கும். அவைகளில் இருக்கும் ரசாயனத் தாக்கமே அதற்கு காரணம்.

அந்தக் காலத்தில் தாத்தா, பாட்டிகள் 80 வயதிலும் கம்பீரமாக நடந்து செல்வார்கள். அவரவர் வேலைகளை அவர்களே சுயமாக செய்துவந்தனர். ஆனால் இன்றோ ரசாயன உணவு வகைகளை சாப்பிட்டதன் காரணமாக சிறிய வயதிலேயே சர்க்கரை நோய், கிட்னி செயல் இழப்பு, புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு, தைராய்டு, உடல்பருமன் உள்ளிட்ட பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகி சிரமப்படுகிறோம். அன்று முதியவர்களிடம் இருந்த ஆரோக்கிய நிலை இன்றைய இளைஞர்களிடம்கூட இல்லை. இதற்கு ஒரே தீர்வு, நாம் இப்போதிருந்தே ரசாயன கலப்பில்லாமல் இயற்கையான முறையில் சாகுபடி செய்யப்படும் உணவுகளை உண்ணவேண்டும்” என்று கூறும் அல்லி, இயற்கைமுறையில் காய்கறிகளை விளைவிக்க வழிகாட்டவும் செய்கிறார்.

“அத்தகைய காய்கறிகளுக்காக நாம் அடுத்தவர்களை நம்பியிருக்கக்கூடாது. நமக்கு தேவையானவைகளை நாமே உற்பத்திசெய்து கொள்ள வேண்டும். அதற்காக நாம் விவசாய நிலத்தை தேடி செல்ல வேண்டாம். ஏனெனில் இன்றைய விவசாய நிலங்களில் பல்வேறு ரசாயன உரங்கள் போடப்பட்டு அதன் தன்மை மாறிவிட்டது. எனவே இயற்கைமுறை காய்கறிகளை நம் வீட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கு சிறிதளவு இடம் இருந்தால் போதும். மொட்டை மாடி வீடாக இருந்தால் மாடித்தோட்டம் அமைக்கலாம். வீட்டிலே தோட்டம் அமைத்தால் பூ பூக்கும் ஓசையை கேட்டும், மலரும் பூக்களை பார்த்தும் நாம் மகிழலாம்.

முன்பெல்லாம் பெரிய மண் தொட்டிகளில் செடிகளை வளர்த்தார்கள். அவைகளை கையாளுவது சிரமம். மண் தொட்டியில் செடிகள் வளர்க்க அதிக தண்ணீரும் தேவைப்படும். பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் குடங்கள், தண்ணீர் கேன்களின் மேல் பகுதியை அழகாக வெட்டி கத்தரித்து தொட்டியாக பயன்படுத்தி கொள்ளலாம். பெயிண்ட் பூசப்பட்ட பிளாஸ்டிக் சாக்கு பைகளையும் தொட்டியாக மாற்றி செடிகளை வளர்க்கலாம்.

நாம் வளர்க்கும் காய்கறி செடிகளுக்கு தேவையான இயற்கை உரத்தையும் எளிதாக பெறலாம். மண்புழுதான் விவசாயியின் நண்பன். அதனை நாமே உற்பத்தி செய்யலாம். பண்ணைகளிலும் வாங்கி பயன்படுத்தலாம். வீடுகளில் சேரும் காய்கறி கழிவுகள், முட்டை ஓடுகள் போன்றவற்றை ஒரு தார்பாலினுள் போட்டு தேங்காய் நார் கழிவுகள், செம்மண் போட்டு பதப்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கலாம். கரும்புச் சக்கை, மாட்டுச் சாணம், உழவர் சந்தை காய்கறி கழிவுகள், வாழைத்தார் கழிவுகள், மண்புழு ஆகியவற்றை போட்டு இயற்கை எரு தயாரிக்கலாம். இதை நாம் செடிகள் வைத்துள்ள பையில் தேவைக்கு போட்டு நீர் ஊற்றி வளர்க்கலாம்” என்று ஆலோசனை தருகிறார்.

‘இதற்கு தேவையான பாரம்பரிய விதைகளை எப்படி பெறுகிறீர்கள்?’ என்று அல்லியிடம் கேட்டபோது..

“முன்பெல்லாம் விவசாயிகள் விதைகளை காசு கொடுத்து வாங்குவதில்லை. அறுவடை காலத்தின்போது தரமான பயிர், காய்கறிகளில் இருந்து விதைகளை தாங்களே தேர்வு செய்து பாதுகாப்பாக வைத்து கொள்வார்கள். நெல், கத்தரி, வெங்காயம், மிளகாய், புடலை, பாகற்காய் இப்படி எந்த காய்கறி என்றாலும் அதில் இருந்து விதைகளை தேர்வு செய்து அது கெட்டுப்போகாமல் இருப்பதற்காக வீட்டில் உள்ள தானிய குதிருக்குள் வைப்பார்கள். முன்பு பெரும்பாலான வீடுகளில் குதிர்கள் இருந்தன. அவைகளில் சேமிக்கப்பட்டதுதான், பாரம்பரிய விதைகள். ஆனால் கால போக்கில் அதிக மகசூலுக்கு ஆசைப்பட்ட விவசாயிகள் ரசாயன உரங்கள் போட்டு தங்கள் மண்ணின் மகிமையை குறைத்துவிட்டார்கள். மீண்டும் இயற்கை உரம் போட்டு மண் வளத்தை அதிகரித்து விவசாய நிலத்தை மேம்படுத்த என்னை போன்ற இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகளை சந்தித்து ஆலோசனை வழங்கி வருகிறோம். இயற்கை முறையில் காய்கறிகளை விளைவிக்க வீரிய விதைகளை வாங்கி நடவு செய்து செடிகளாக வளர்க்க வேண்டும். வீரிய விதைகள் அரசு வேளாண்மை மையங்களில் கிடைக்கும். இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களிடம் இருந்தும் பாரம்பரிய விதைகளை பெற்றுக்கொள்ளலாம்” என்று கூறும் அல்லி, தனது குடும்பத்தை பற்றியும், தனக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் வந்ததையும் விளக்குகிறார்.

“நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தொப்பப்பட்டி கிராமத்தில் நான் பிறந்து வளர்ந்தேன். எங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இயற்கை உரம் போட்டு காய்கறிகள், நெற்பயிர்கள், பயறு வகைகளை விளைவித்தோம். அதை சாப்பிட்டு நல்ல ஆரோக்கியமாக வாழ்ந்தோம். அதன்பிறகு கொங்கணாபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருடன் திருமணம் நடந்து சேலம் நகரத்துக்கு குடி பெயர்ந்து வந்தேன். நகர வாழ்க்கையில் சிக்கி கொண்டோம். மரபணு மாற்றப்பட்ட விதைகளில் விளைவித்த காய்கறிகளை சாப்பிட்டதால், பல்வேறு நோய்கள் துரத்த ஆரம்பித்தன. 15 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை கைலாஷ் திடீரென்று மாரடைப்பால் இறந்து விட்டார். அதன்பிறகுதான் நல்ல ஆரோக்கியமான உணவுகளை நம் சந்ததிகளுக்கு தரவேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டிலே தோட்டம் அமைத்து இயற்கை விவசாயம் செய்து, அந்த காய்கறிகளை எங்கள் தேவைக்கு பயன்படுத்தி வருகிறேன். மற்றவர்களுக்கு விவசாய ஆலோசனைகளும் வழங்குகிறேன்” என்கிறார்.

அல்லியின் கணவர் கார்த்திகேயனும் விவசாயிதான். இவர்களது மகன் அபிஷேக் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். மகள் கீர்த்திகா. இருவருக்கும் திருமணமாகி விட்டது.


செடிகளை வளர்க்கும் முறை


ஒரு அடிக்கு ஒரு அடி அளவில் பை தயார் செய்யவேண்டும். அதனுள் க்ரோயிங் மீடியம் (தேங்காய் நார் கழிவு, மண்புழு உரம்) சேர்க்க வேண்டும். இதற்கு ரூ.150 செலவாகும். ஒரு பையில் ஒரு தக்காளி செடியோ அல்லது ஒரு கத்தரியோ, ஒரு வெண்டை செடியோ, ஒரு மிளகாய் செடியோ வளர்க்கலாம். கீரை வளர்க்கும் பை 2 அடி அகலமும் 9 அங்குல உயரமும் கொண்டதாக இருக்கவேண்டும். அதிலும் தேங்காய் நார்கழிவு, மண்புழு உரம் போட வேண்டும். அதில் கொத்தமல்லி, புதினா, பாலக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை போன்ற அனைத்து வகையான கீரைகளையும் வளர்க்கலாம்.

ஒன்றரை அடிக்கு ஒன்றே கால் அடி பையில் தக்காளி, வெண்டை, மிளகாய், கத்தரி ஆகியவற்றை இரண்டிரண்டு செடியாக வளர்க்கலாம். ஒன்றரை அடிக்கு ஒன்றரை அடி பையில் கொடி வகையான பீர்க்கங்காய், பாகற்காய், புடலை போன்றவற்றை வளர்க்கலாம். இரண்டு அடிக்கு இரண்டு அடி எனில் எலுமிச்சை, மாதுளை, பப்பாளி, முருங்கை, அகத்தி, சப்போட்டா, கொய்யா, வாழை போன்ற மர வகைகளை வளர்க்கலாம். பெரிய டிரம் அல்லது பயன்படுத்தாத பிளாஸ்டிக் தொட்டியில் வாழை நன்கு வளரும்.

ஒரு குடும்பத்திற்கு 10 செடி வளர்பைகளில் ஒரு மிளகாய், 3 வெண்டை, 3 தக்காளி, இரண்டு கத்தரி, ஒரு முள்ளங்கி போன்றவைகளை வளர்த்தாலே தேவைக்கு காய்கள் கிடைத்து விடும். கூடவே கீரை வளர்பைகள் 4 இருந்தால் கொத்தமல்லி, புதினா, சிறுகீரை, பாலக்கீரையை வளர்த்து விடலாம். ரூ.2 ஆயிரம் செலவில், 15 பைகளில் வீட்டுத் தேவைக்கான அனைத்து காய்கறி, கீரைகளையும் வளர்த்து விடலாம். அதை சாப்பிட்டு ஆரோக்கியமாகவும் வாழலாம். மருத்துவ செலவுகள் தேவையில்லாத நிலையையும் உருவாக்கிவிடலாம். 

Next Story