உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 2 Sept 2018 5:09 PM IST (Updated: 2 Sept 2018 5:09 PM IST)
t-max-icont-min-icon

குடிகார தந்தை உங்கள் வீட்டில் இருந்தால், மோசமான நண்பர்களோடு சேர்ந்து குடிக்கும் பழக்கம் அவருக்கு இருந்தால், உங்கள் வீட்டில்கூட இப்படி ஒரு விபரீதம் நடக்கலாம்.

பெண்கள் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்பதற்காக இந்த சம்பவத்தை சொல்கிறோம்!

மலையோர கிராமம் ஒன்றை சேர்ந்த அவளுக்கு 28 வயது. ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால் இன்னும் திருமணமாகவில்லை. தந்தை காட்டுப் பகுதியில் மரம் வெட்டும் வேலைக்கு செல்வார். ஊருக்குள் தப்பான காரியங்களை செய்துவிட்டு தலைமறைவாக வாழும் சிலர், அவரோடு சேர்ந்து மரம் வெட்டினார்கள். அவர்களோடு சேர்ந்து இவரும் தினமும் மது அருந்துவார். கிடைக்கும் பணத்தில் பெரும்பகுதியை குடித்தே அழித்து விடுவார். தந்தையை திருத்த முடியாததாலும், குடும்ப செலவுக்கு அவர் பணம் தராததாலும், அந்த பெண்ணின் அம்மாவும் கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

தந்தை பெரும்பாலான நாட்கள் குடித்துவிட்டு தள்ளாடியபடி இரவு நேரங்களில் வீடு வந்து சேருவார். வந்த உடன் அவருக்கு சாப்பாடு போட வேண்டும். அதுவும் வாய்க்கு ருசியாக அசைவ உணவு கேட்பார். இல்லாவிட்டால் தாய்க்கும், மகளுக்கும் அடிவிழும். அடிக்கு பயந்து, யாருடைய தோட்டத்திலாவது போய் வேலை பார்த்து, அதில் கிடைக்கும் பணத்தில் மீன் வாங்கி வாய்க்கு ருசியாக தாயார் சமைத்துவைத்து விடுவாள்.

அவர் காலை நேரத்தில் போதை தெளிந்து இருக்கும் நேரத்தில், தாயார் மகளின் எதிர்காலம் பற்றி பேசி புரியவைக்க முயற்சிப்பாள். ஆனால் அவர் அதை காதுகொடுத்து கேட்பதே இல்லை. அந்த பெண்ணின் சக வயதுடையவர்களுக்கெல்லாம் திருமணமாகி விட்டது. அவர்கள் தாயாகவும் ஆகிவிட்டார்கள். அதை எல்லாம் எடுத்துக்கூறியும், அவரிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அன்று இரவு வழக்கமான நேரத்தை தாண்டிய பிறகும் குடிகார தந்தை வீடு திரும்பவில்லை. நன்றாக மழை பெய்துகொண்டிருந்தது. வீட்டிற்குள் நிம்மதியாக தூங்க முடியாமலும், வெளியே சென்று தேட முடியாமலும் தாயும், மகளும் தவித்துக்கொண்டிருந்தபோது, மழையில் தொப்பலாக நனைந்தபடி மூன்று பேர் சேர்ந்து அவரை தோள் போட்டு தூக்கிவந்தார்கள்.

அந்த காட்சியை பார்த்து தாயும், மகளும் அதிர்ந்து நின்றிருக்கிறார்கள். தினமும் அவர் குடித்துவிட்டு வந்தாலும், இப்படி மற்றவர்கள் தூக்கி வரும் நிலைக்கு ஆளானதில்லை. தூக்கி வந்த நபர்கள் முன்பின் அறிமுகமற்றவர்கள். நடுத்தர வயதானவர்கள். கட்டுமஸ்தான உடல்வாகுடன் முரட்டுத்தனமாக காணப்பட்டார்கள். வீட்டிற்குள் கட்டிலில் அவரை போட்டுவிட்டு அவர்கள் திரும்பிவிட்டார்கள்.

போதையில் கிடக்கிறாரா அல்லது விபத்து எதிலாவது சிக்கி அடிபட்டிருக்கிறாரா? என்று தெரியாமல், பதற்றத்தோடு தாயும், மகளும் அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்துகொண்டிருந்தனர். அவருக்கு உயிர் இருந்தது. ஆனால் மிக அதிக போதையை தரக்கூடிய போதைப்பொருள் எதையோ அவர் உட்கொண்டிருந்ததால் நினைவற்ற நிலையில் கிடந்தார். அப்போது கதவு திறந்தே கிடந்ததை தாயும், மகளும் கவனிக்கவில்லை. வெளியே மழை மிக பலமாக அடித்துக்கொண்டிருந்திருக்கிறது.

திடீரென்று அந்த முரடர்கள் மூவரும் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்கள். கதவை தாழிட்டிருக்கிறார்கள். தாயும், மகளும் நிலைகுலைந்து நிற்க தாயை பிடித்து கண்களை கட்டியிருக்கிறார்கள். வாயில் துணியை திணித்து, ஒரு மூலையில் போட்டுவிட்டு, மூவரும் அந்த இளம் பெண் மீது பாய்ந்திருக்கிறார்கள். காட்டுமாடு புகுந்த வீடு போன்று அவளை சின்னாபின்னப்படுத்திவிட்டு, ‘வெளியே சொன்னால் காலி பண்ணிடுவோம்’ என்று மிரட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள். அவர்கள் திட்டமிட்டு அவளது தந்தைக்கு போதைப்பொருளை கொடுத்துவிட்டு, இந்த அவலத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

விடிய விடிய தாயும், மகளும் அழுதிருக்கிறார்கள். மறுநாள் காலையில் போதை தெளிந்து அவர் எழுந்திருந்திருக்கிறார். நடந்ததை பட்டும்படாமலும் கூறி, ‘அத்தனைக்கும் அவர்தான் காரணம்’ என்பதை விளக்கி தாயும், மகளும் சேர்ந்து அடித்து உதைத்திருக்கிறார்கள். மீண்டும் அந்த முரடர்கள் வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அந்த வீட்டையே காலிசெய்துவிட்டு, வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இந்த அவலம் பக்கத்து மாநிலத்தில் நடந்தது.

- உஷாரு வரும். 

Next Story