பால் விற்பனையில் அதிக லாபம் பெற விவசாயிகள் நாட்டு மாடுகள் வளர்க்க வேண்டும் - கலெக்டர் சி.கதிரவன்
பால் விற்பனையில் அதிக லாபம் பெற விவசாயிகள் நாட்டு மாடுகள் வளர்க்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பேசினார்.
சென்னிமலை,
சென்னிமலை அருகே உள்ள வாய்ப்பாடியில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு, பெருந்துறை தொகுதி தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில கோ–ஆப்டெக்ஸ் இயக்குநர் ப.கோபாலகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் கே.ஏ.கருப்புசாமி, எஸ்.பெரியசாமி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர்கள் கே.ஆர்.துரைசாமி, விஜயன் என்கிற ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த சுமார் 250 மனுக்களை பெற்றார். சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈங்கூர், வரப்பாளையம், பனியம்பள்ளி. வாய்ப்பாடி, கூத்தம்பாளையம் மற்றும் சிறுக்களஞ்சி பகுதி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தார்கள்.
முன்னதாக அவர் பேசியதாவது:
கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் என பல்வேறு உதவித்தொகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இடைத்தரகர்களின் தொந்தரவு இல்லாமல் பொதுமக்கள் தங்களது அரசு திட்டங்களை பெற வேண்டும் என்பதற்காக மக்களிடமே நேரடியாக வந்து மனுக்களை பெறுகிறோம். கிராமப்புறங்களில் வீட்டுக்கு வீடு கழிப்பறைகள் கட்டினால் மட்டும் போதாது. அவற்றை பயன்படுத்த வேண்டும். கர்ப்பிணிகளாக இருந்தால் ரத்த சோகை ஏற்பட்டு குழந்தையையும் பாதிக்கும். விவசாயிகள் அனைவரும் நாட்டு மாடுகள் வளர்க்க வேண்டும். சிந்து மாடுகளை வளர்ப்பதால் அதிக செலவு ஏற்படுவதுடன் லாபமும் குறையும். அதனால் நாட்டு மாடுகள் வளர்ப்பதால் செலவு குறைவதுடன் பால் விற்பனையில் அதிக லாபம் பெறலாம்.
மேலும் நாட்டு மாட்டு பால் மட்டுமே ஆரோக்கியத்தையும் கொடுக்கும். நான் கூட ஈரோடு வருவதற்கு முன்பு 3 நாட்டு மாடுகள் வளர்த்தேன். நமது மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதுடன் மருந்து இல்லாத இயற்கை முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் பேசினார்.