அரசு ஊழியர்களின் குடியிருப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது


அரசு ஊழியர்களின் குடியிருப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
x
தினத்தந்தி 3 Sept 2018 3:00 AM IST (Updated: 2 Sept 2018 10:13 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் அரசு ஊழியர்களின் குடியிருப்பில் உள்ள வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.

கடலூர்,

கடலூர் வில்வநகரில் அரசுக்கு சொந்தமான வீட்டு வசதிவாரிய குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 100–க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தங்களது குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். இதில் முதல் மாடியில் உள்ள ஒரு வீட்டில் கோர்ட்டு ஊழியர் மாசிலாமணி (வயது 51) என்பவர் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் இவர் வீட்டுக்கு வெளியில் அமர்ந்து குடும்பத்தோடு பேசிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்து கட்டிடம் இடிந்து விழுவது போல் சத்தம் கேட்டது. இதையடுத்து பதற்றத்துடன் மாசிலாமணி ஓடிச்சென்று பார்த்தார். அங்கே அவர் வீட்டின் படுக்கை அறை மேற்கூரையில் இருந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து கிடந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால், அனைவரும் காயமின்றி தப்பினார்கள்.

இது பற்றி அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறுகையில், இந்த வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் இதை முறையாக அதிகாரிகள் பராமரிப்பது இல்லை. தற்போது கட்டிடம் பல இடங்களில் விரிசல் விட்டுள்ளது. சில வீட்டுச்சுவர்களில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. குடியிருப்பை சுற்றிலும் சாக்கடை நீர் தேங்கி கிடக்கிறது. ஆகவே இந்த அடுக்குமாடி குடியிருப்பை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்றனர். இந்த சம்பவத்தால் குடியிருப்பு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story