காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு விரைவில் கவிழும் எடியூரப்பா பேட்டி


காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு விரைவில் கவிழும் எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 3 Sept 2018 3:00 AM IST (Updated: 2 Sept 2018 11:35 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு விரைவில் கவிழும் என்று எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு விரைவில் கவிழும் என்று எடியூரப்பா கூறினார்.

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விரைவில் கவிழும்

கர்நாடகத்தில் அரசு இருந்தும் செத்துப்போனது போல் உள்ளது. அரசு ஊழியர்கள் பணி இடமாற்றத்தில் லஞ்சம் வாங்குகிறார்கள். அதிகமாக இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இந்த கூட்டணி ஆட்சி நீடிக்கும். மாநிலத்தில் ஒரு வளர்ச்சி பணி கூட நடைபெறவில்லை. விவசாய கடன் தள்ளுபடி விஷயத்தில் மாநில அரசு இன்னும் ஒரு தெளிவான தகவலை மக்களுக்கு தெரிவிக்கவில்லை. கூட்டுறவு வங்கிகள் திவாலாகி வருகின்றன. கர்நாடகத்தில் 13 மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது.

முதல்-மந்திரி குமாரசாமி வடகர்நாடகத்தில் ஒரு நாள் கூட சுற்றுப்பயணம் செய்யவில்லை. 100 நாட்களை கொண்டாடி வரும் கூட்டணி அரசு, முக்கிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. இந்த காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு விரைவில் கவிழும். எக்காரணம் கொண்டும் இந்த அரசு ஆட்சி காலத்தை பூர்த்தி செய்யாது. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா விரைவில் ஆட்சியை பிடிக்கும். உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா 50 சதவீத இடங்களில் வெற்றி பெறும்.

ஆட்சேபனை இல்லை

கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நடத்தியதே பெரிய சாதனை என்று சித்தராமையா கருதுகிறார். காங்கிரசில் ஒரு குழப்பமான சூழல் உள்ளது. முதல்-மந்திரி ஆவதற்கு நான் பகல் கனவு காண்பதாக சித்தராமையா சொல்கிறார். யார் பகல் கனவு காண்கிறார் என்பது விரைவில் தெரியவரும். சித்தராமையா ஹாசன் உள்பட எங்கெங்கு என்ன பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும்.

குமாரசாமி கோவில்களுக்கு செல்வதற்கு எங்களது ஆட்சேபனை இல்லை. விவசாயிகள் தீவிரமான கஷ்டத்தில் உள்ளனர். விவசாய விளைபொருட்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது. ஆயினும் மாநில அரசு இன்னும் கொள்முதல் மையங்களை திறக்கவில்லை. சித்தராமையா மற்றும் என்னுடைய தொலைபேசி ஒட்டுகேட்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

மோடியின் செல்வாக்கு

எனது தொலைபேசி ஒட்டுகேட்கப்படுவது உண்மை தான். நாடாளுமன்ற தேர்தலில் சித்தராமையா எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடட்டும். அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. மோடியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story