வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகில் மறுசீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஸ்ரீவித்யா ஆய்வு செய்தார்.
குடகு,
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஸ்ரீவித்யா ஆய்வு செய்தார்.
கொட்டி தீர்த்த கனமழை
குடகு மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதுடன் குடியிருப்புகளை சூழ்ந்தது. மேலும் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டன. இதனால் 180-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து நாசமானது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
மேலும் முக்கிய சாலைகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சேதமடைந்து கிடக்கின்றன. அதாவது மண் அரிப்பு ஏற்பட்டதாலும், நிலச்சரிவாலும் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து 14 நாட்களாக முடங்கிபோய் உள்ளது. குறிப்பாக மடிகேரி தாலுகா தான் மழையின் கோரதாண்டவத்தில் சின்னாபின்னமாகிவிட்டது. அரசு சார்பில் மாற்றுப்பாதைகளில் மங்களூரு, பெங்களூரு, மைசூரு ஆகிய பகுதிகளுக்கு மினிபஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெள்ளம்- நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகள், உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியிருந்தனர். சுமார் 2 ஆயிரம் பேர் வெள்ளம் வடிந்ததை தொடர்ந்து தங்களது வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். அதுபோல் மீதி மக்கள் முகாம்களிலேயே தங்கியிருந்து வருகிறார்கள்.
உடலை தேடும் பணி இன்று நிறைவு
குடகு மாவட்டத்தில் மட்டும் கனமழைக்கு 17 பேர் பலியாகியுள்ளனர். 4-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களது உடல்கள் இதுவரை மீட்கப்படவில்லை. அவர்களது உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இன்றுடன் (திங்கட்கிழமை) உடல்கள் தேடும் பணி நடைபெறும் என்றும், அதன் பின்னர் உடல்கள் தேடும் பணி நடைபெறாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மாயமானவர்களை இழந்து தவித்து வரும் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மண் அரிப்பால் சேதமடைந்த சாலைகள் புதுப்பிக்கும் பணியும் நடந்து வருகிறது. அதுபோல் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாலைகளும் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கும், வீடு திரும்பியவர்களுக்கும் அரசு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கலெக்டர் ஆய்வு
இதற்கிடையே குடகு மாவட்டத்தில் பரவலாக கடந்த 5 நாட்களாக மழை பெய்து வருகிறது. மழையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் மட்டும் தொடர் மழையால் சீரமைப்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் தொடர்வதால் வருகிற 9-ந்தேதி வரை குடகு மாவட்டத்திற்கு சுற்றுலா வர தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் மடிகேரி அருகே தலத்தமனே பகுதியில் நிவாரண முகாம்களில் கலெக்டர் ஸ்ரீவித்யா நேற்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு தங்கியுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது விரைந்து செயல்பட்டு வீடுகளை கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதில் அளித்த கலெக்டர் ஸ்ரீவித்யா முதற்கட்டமாக அரசு சார்பில் அலுமினிய கொட்டகைகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் பிறகு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதையடுத்து முகாம்களில் உள்ள சமையல் அறைக்கு சென்று உணவு தயார் செய்வதையும் ஆய்வு செய்தார்.
6-வது நாளாக தொடரும் மழை
அதன் பிறகு அந்தப் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்று அங்கு தங்கியுள்ள மக்களிடமும் அவர் குறைகளை கேட்டறிந்தார். அதுபோல் சுள்ளியா, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முகாம்களுக்கும் சென்று கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் மக்களிடம் குறைகளை கேட்டார். பிறகு ஜோடுபாலா, கல்லூரி, மக்கந்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கும்படி ஒப்பந்ததாரர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகில் ஒரு புறம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே 6-வது நாளாக நேற்றும் குடகில் பரவலாக மழை பெய்தது. அத்துடன் குளிரும், பனிப்பொழிவும் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
மழை அளவு விவரம்
நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் குடகு மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் பின்வருமாறு:-
மடிகேரி- 6.9 மி.மீ, பாகமண்டலா- 21.4 மி.மீ, நாபொக்லு- 11 மி.மீ, சம்பாஜே-12.8 மி.மீ, சோமவார்பேட்டை-8 மி.மீ, கொட்லிபேட்டை- 4.1 மி.மீ, குசால்நகர்-5.3 மி.மீ, சனிவார சந்தே- 7 மி.மீ, சந்தேஹள்ளி-8.1 மி.மீ, சுண்டிகொப்பா-6.8 மி.மீ, விராஜ்பேட்டை- 10.9 மி.மீ, அம்மத்தி- 6.3 மி.மீ, பாலலே- 8.4 மி.மீ, உதிக்கேரி- 9.3 மி.மீ, பொன்னம்பேட்டை-8.9 மி.மீ, ஸ்ரீமங்களா-9 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
Related Tags :
Next Story