தசரா விழாவில் பங்கேற்கும் 6 யானைகள் மைசூருவுக்கு கஜபயணம் மந்திரி ஜி.டி.தேவேகவுடா தொடங்கிவைத்தார்


தசரா விழாவில் பங்கேற்கும் 6 யானைகள் மைசூருவுக்கு கஜபயணம் மந்திரி ஜி.டி.தேவேகவுடா தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 3 Sept 2018 4:30 AM IST (Updated: 3 Sept 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

தசரா விழாவில் பங்கேற்கும் 6 யானைகளும் மைசூருவுக்கு கஜபயணமாக வந்தன. முன்னதாக கஜபயணத்தை மந்திரி ஜி.டி.தேவேகவுடா தொடங்கிவைத்தார்.

மைசூரு, 

தசரா விழாவில் பங்கேற்கும் 6 யானைகளும் மைசூருவுக்கு கஜபயணமாக வந்தன. முன்னதாக கஜபயணத்தை மந்திரி ஜி.டி.தேவேகவுடா தொடங்கிவைத்தார்.

மைசூரு தசரா விழா

உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையையொட்டி 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்க உள்ளது. குடகு, தட்சிணகன்னடா உள்ளிட்ட மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், தசரா விழா எளிமையாக கொண்டாடப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.

இந்த தசரா விழாவின் முக்கிய நிகழ்வாக 19-ந்தேதி ஜம்பு சவாரி என்னும் யானைகள் ஊர்வலம் நடக்கும். இதில் அர்ஜூனா உள்பட 12-க்கும் மேற்பட்ட யானைகள் அணிவகுத்து செல்லும். அதைதொடர்ந்து பல்வேறு கலைக்குழுவினரும், அலங்கார வாகனங்களும் ஊர்வலமாக செல்லும். இந்த நிகழ்வை காண கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாட்டினரும் மைசூருவில் குவிவது வழக்கம்.

முதற்கட்ட கஜபயணம்

இந்த தசரா விழாவில் பங்கேற்கும் யானைகளுக்கு வெடி சத்தம் கேட்டு மிரளாமல் இருக்கவும், மணல் மூட்டைகளை தூக்கிக்கொண்டு நடக்கவும் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இந்த பயிற்சிக்காக தசரா விழாவில் கலந்துகொள்ளும் யானைகள் ஒரு மாதத்திற்கு முன்பாக மைசூருவுக்கு அழைத்துவரப்படும். இந்த நிகழ்வு கஜபயணம் என்று அழைக்கப்படுகிறது.

அடுத்த மாதம் நடைபெறும் தசரா விழாவில் கலந்துகொள்ள முதற்கட்டமாக 6 யானைகள் மைசூருவுக்கு அழைத்து வரும் கஜபயணம் செப்டம்பர் மாதம் 2-ந்தேதி (அதாவது நேற்று) தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 750 கிலோ தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா, வரலட்சுமி, விக்ரமா, கோபி, தனஞ்செயா, அபிமன்யூ ஆகிய 6 யானைகள் முகாம்களில் இருந்து மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா நாகரஒலே வனப்பகுதிக்கு உட்பட்ட வீரனஒசஹள்ளி கிராமத்தில் கஜபயண தொடக்க விழா நேற்று நடந்தது.

மந்திரி தொடங்கிவைத்தார்

இதையொட்டி 6 யானைகளும் குளிப்பாட்டி அலங்கரிக்கப்பட்டன. மேலும் வீரனஒசஹள்ளி கிராமத்தில் தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. அத்துடன் திபெத் மற்றும் மலைவாழ் குழந்தைகளின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து 6 யானைகளும் நெற்றிபட்டை அணிவிக்கப்பட்டு அணிவகுத்து நின்றன. அந்த யானைகளுக்கு சிறப்பு பூஜை செய்து கரும்பு, வெல்லம், கொப்பரை தேங்காய், பல்வேறு வகையான பழங்கள் வழங்கப்பட்டன.

அதையடுத்து கஜபயணத்தை மாநில உயர்கல்வித்துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான ஜி.டி.தேவேகவுடா தொடங்கிவைத்தார். யானைகள் தும்பிக்கையை தூக்கி வணக்கம் செலுத்தி, மேளதாளங்கள் முழங்க நடக்க தொடங்கியது. அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் யானைகள் மீது பூக்கள் தூவி வழியனுப்பி வைத்தனர்.

மைசூருக்கு வந்தன

இந்த நிகழ்ச்சியில் மந்திரி சா.ரா.மகேஷ், தன்வீர்சேட் எம்.எல்.ஏ., கலெக்டர் அபிராம் ஜி. சங்கர் மற்றும் வனத்துறை அதிகாரிகள், தசரா விழா கமிட்டியினர் கலந்துகொண்டனர். அதையடுத்து கஜபயணத்தை தொடங்கிய யானைகள் சிறிது நேரம் நடைபயணமாக அழைத்துச் செல்லப்பட்டது. அதன் பின்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு 6 யானைகளும் மைசூரு அசோகபுரத்தில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டன. மாலை 6 மணி அளவில் 6 யானைகளும் அங்கு வந்து சேர்ந்தன.

Next Story