18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும் டி.டி.வி.தினகரன் பேச்சு


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும் டி.டி.வி.தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 2 Sep 2018 11:15 PM GMT (Updated: 2 Sep 2018 6:45 PM GMT)

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும் என நீடாமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

நீடாமங்கலம்,

கடைமடை வரை காவிரி நீர் செல்ல வழிவகை செய்யாத தமிழக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் ஆதாயத்துக்காக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லை. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடலுக்குசென்று கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லி கொள்பவர்கள் தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ வேண்டும் என்பதற்காக தமிழகத்தையே சுரண்டி கொண்டிருக்கிறார்கள்.

குடிமராமத்து பணி, தூர்வாரும் பணி என்றெல்லாம் கூறி ஒதுக்கப்பட்ட நிதியை கொள்ளையடித்து வருகிறார்கள். பல ஆண்டு போராட்டத்துக்குப்பின் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில தேர்தலுக்காக காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை பா.ஜ.க. இழுத்தடித்தது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் தமிழக அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். 234 தொகுதிகளிலும் மக்கள் எதிர்பார்க்கிற நல்ல தீர்ப்பு அந்த வழக்கில் கிடைக்கும். அப்போது தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும்.

கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பூமிக்கடியில் நிலக்கரி எடுக்க நிலங்களை தேர்வு செய்துள்ளார்கள். பூமிக்கடியில் வைரமே கிடைத்தாலும் தேவையில்லை. டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்களை காப்பாற்றுவோம். டெல்டா மாவட்டங்களில் விவசாயமும், விவசாயத்தை சார்ந்த தொழிலுமே நடக்க வேண்டும்.

எட்டு வழிச்சாலை தொலை நோக்கு திட்டம் என ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர்களால் ஆற்றுநீரை தேக்கி வைக்க முடியவில்லை.

ஊழலை திசை திருப்ப ஆட்சியாளர்கள் ஊர் ஊராக சுற்றி வருகிறார்கள். மன்னார்குடியில் கூட்டம் போட்ட ஓ.பன்னீர்செல்வம் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசி உள்ளார். பன்னீர்செல்வத்துக்கு என்னை கண்டால் பயம் ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story