கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான கார் பந்தயத்தில் சென்னை வீரர் வெற்றி
கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான கார் பந்தயத்தில் சென்னை வீரர் ஜோசப் மேத்யூ வெற்றி பெற்றார்.
கோவை,
கோவை செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டார்சில் தேசிய அளவிலான கார் பந்தயம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மராட்டியம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் எல்.ஜி.பி. பார்முலா 4 கார் பந்தயத்தில் சென்னையை சேர்ந்த விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்றார். சென்னை வீரர் ரகுல் ரங்கசாமி 2–ம் இடத்தையும், டெல்லியை சேர்ந்த ரோகித் கண்ணா 3–ம் இடத்தையும் பிடித்தனர்.
சுசூகி சிக்சர் கோப்பை பந்தயத்தில் சென்னை வீரர் ஜோசப் மேத்யூ வெற்றி பெற்றார். கர்நாடகாவை சேர்ந்த சையது முஸ்ஸாம்மில் அலி 2–ம் இடத்தையும், மிசோரம் மாநிலத்தை சேர்ந்த மலாசமுத்வாங்லாமா 3–ம் இடத்தையும் பிடித்தனர். யூரோ ஜே.கே.18 கோப்பைக்கான பந்தயத்தில் சென்னையை சேர்ந்த அஸ்வின் முதல் இடத்தையும், மராட்டியத்தை சேர்ந்த நயன்சட்டர்ஜி 2–ம் இடத்தையும், சென்னையை சேர்ந்த கார்த்திக் தாரணி 3–ம் இடத்தையும் பிடித்தனர்.
ஜே.கே.டயர் நோவிஸ் கோப்பைக்கான பந்தயத்தில் கர்நாடகாவை சேர்ந்த டைஜில் ராவ் முதலிடத்தையும், குஜராத்தை சேர்ந்த ஹூசைபா டின்வாலா 2–ம் இடத்தையும், கோவையை சேர்ந்த கிருஷ்ணவேலு 3–ம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்த கார் பந்தயத்தின் போது மோட்டார் சைக்கிள் வீரர்கள் பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்தனர். இதனை பொதுமக்கள் வியப்புடன் கண்டு களித்தனர்.