குற்றங்களை தடுக்க கிராமங்களில் முக்கிய இடங்களில் புகார் பெட்டி


குற்றங்களை தடுக்க கிராமங்களில் முக்கிய இடங்களில் புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 Sep 2018 10:30 PM GMT (Updated: 2 Sep 2018 7:12 PM GMT)

குற்றங்களை தடுக்க கிராமங்களில் முக்கிய இடங்களில் புகார் பெட்டி வைக்கப்படும் என தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் போலீஸ்- பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், மக்களை நோக்கி போலீஸ்துறை என்ற தலைப்பில் நாகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் முன்னிலை வகித்தார். இதில் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

நாகையில் உள்ள கிராமங்களில் குற்றங்களை தடுப்பதற்காகவும், பொதுமக்கள் தாங்கள் தெரிவிக்கும் புகார்கள் மற்றும் தகவல்களை சேகரிப்பதற்காகவும் போலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும், குற்றங்களை தடுக்க கிராமங்களில் உள்ள கோவில், மருத்துவமனை, பஸ் நிறுத்தம், பஜார் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்படும். ஏதேனும் புகார்கள், தகவல்கள் இருந்தால் பொதுமக்கள் அந்த புகார் பெட்டியில் போடலாம் என்றார். இதைத்தொடர்ந்து நியமிக்கப்பட்ட போலீஸ் குழுக்களுக்கு புகார் பெட்டிகளை வழங்கினார்.

கூட்டத்தில் போலீஸ்- பொதுமக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையிலும், மக்களை நோக்கி போலீஸ் துறை திட்டத்தை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தும் விதமாகவும், நாகை நகர போலீஸ் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் இந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தலைமை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வடக்கு பொய்கை நல்லூர், பாப்பாகோவில், அந்தணப்பேட்டை, மஞ்சக்கொல்லை, புத்தூர், அக்கரைப்பேட்டை மற்றும் நாகை நகர் பகுதி உள்ளிட்ட இடங்களில் வைப்பதற்காக புகார் பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டது.

இதில் ஊர்க்காவல் படை தலைவர் ஆனந்த், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், நாகை நகர போலீஸ் நிலையத்துக்குட்பட்ட கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Next Story