தஞ்சை மாவட்டத்தில் 59 கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டன


தஞ்சை மாவட்டத்தில் 59 கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 3 Sept 2018 4:30 AM IST (Updated: 3 Sept 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் 59 நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு விட்டன. இதனால் நெல்குவியல், மூட்டைகளுடன் விவசாயிகள் காத்துக்கிடக்கின்றனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இவ்வாறு சாகுடி செய்யப்படும் நெல், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக சம்பா அறுவடை காலங்களில் 300-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். தற்போது காவிரி டெல்டா பகுதியில் குறுவை நெல் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக தமிழக அரசின் சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வந்தன.

தஞ்சை மாவட்டத்தில் அன்னப்பன்பேட்டை, பாபநாசம், கும்பகோணம், திருவிடை மருதூர், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் 59 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி முதல் 59 நெல் கொள்முதல் நிலையங்களும் திடீரென மூடப்பட்டன.

எந்தவித முன்அறிவிப்பும் இன்றி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து மலைபோல் குவித்து வைத்துள்ளனர். சிலர் சாக்குமுட்டைகள் கட்டி வைத்துள்ளனர்.

ஆனால் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடிக்கிடப்பதால் அப்படியே கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லுடன் காத்துக்கிடக்கின்றனர். தஞ்சையை அடுத்த அன்னப்பன்பேட்டையில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல்லுடன் காத்துக்கிடக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “அன்னப்பன்பேட்டை பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அரசு திடீரென கொள்முதல் நிலையங்களை மூடிவிட்டதால் நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நெல் மூட்டைகளுடன் காத்துக்கிடக்கிறோம். இதனால் நெல் வெயிலில் காய்ந்தபடியும், மழையில் நனைந்தபடியும் உள்ளது. தண்ணீர் கிடைக்காமல் ஆழ்துளை கிணறு மூலம் வட்டிக்கு கடன் வாங்கி சாகுபடி செய்தோம். ஆனால் தற்போது சாகுபடி செய்த நெல்லை விற்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். தனியார் குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்கிறார்கள். இதனால் அடுத்து சம்பா சாகுபடிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எனவே அரசு உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறந்து நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றனர்.

இது குறித்து நுகர்பொருள் வாணிபகழக அதிகாரிகள் கூறுகையில், “நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு 3 நாட்கள் ஆகி விட்டது. டெல்லியில் இருந்து வந்த உத்தரவை தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டன. ஆனால் தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருதி கொள்முதல் நிலையங்களை தொடர்ந்து செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தாலுகா தோறும், வேளாண்மைத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி தேவைப்படும் இடங்களில் கொள்முதல் நிலையங்களை இன்று முதல் (திங்கட்கிழமை) திறந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”என்றனர்.

Next Story