“கண் திருஷ்டியால் முக்கொம்பு அணை உடைந்தது” - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
கண் திருஷ்டியால்தான் முக்கொம்பு அணை உடைந்தது என விருதுநகரில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
விருதுநகர்,
விருதுநகரில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:–
எய்ம்ஸ் மருத்துவமனை அருகில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இல்லை. ஆனால் நமது தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் கொடுத்துள்ளார். அதற்கான நிலம் ஒரு சென்ட் கூட தனியார் நிலம் இல்லை. அனைத்தும் அரசு நிலம் என்பதால் வருவாய் துறை உடனடியாக கொடுக்க முடிந்தது. இல்லையென்றால் அதிலும் போராட்டம் நடத்தியிருப்பார்கள். எந்த கோப்புகளும் முதலமைச்சர் அலுவலகத்தில் தேங்குவதில்லை. எனவே தான் சாமானிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வந்து சேர்கின்றன.
முதல்–அமைச்சருக்கு தண்ணீர் ராசி உள்ளது. அதனால்தான் தமிழகத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகிறது. அருகில் உள்ள மாநிலங்கள் நம்மிடம் தண்ணீரை திறந்து விடுகிறனர். அந்த கண் திருஷ்டியில் தான் முக்கொம்பு அணை உடைந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்பு சுண்ணாம்பால் கட்டப்பட்ட அணையின் மதகு உடைந்துள்ளது. இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை. 30 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத 58 கிராம பாசன கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டு தண்ணீர் வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.