“சென்னை அமைதி பேரணியில் 1 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள்” - மு.க.அழகிரி பேட்டி


“சென்னை அமைதி பேரணியில் 1 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள்” - மு.க.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 3 Sept 2018 5:30 AM IST (Updated: 3 Sept 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

‘‘சென்னையில் நடக்கும் அமைதி பேரணியில் 1 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள்’’ என்று மு.க.அழகிரி கூறினார்.

மதுரை,

மதுரை சத்யசாய் நகரில் உள்ள தனது வீட்டில் மு.க.அழகிரி நேற்று 10–வது நாளாக சென்னையில் நடைபெற உள்ள அமைதிப்பேரணி குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நான் தலைவரின் (கருணாநிதியின்) மகன். அதனால் சொன்னதை செய்வேன். 5–ந்தேதி நடக்க உள்ள சென்னை அமைதிப்பேரணியில் 1 லட்சத்திற்கும் மேல் தொண்டர்கள் பங்கேற்பார்கள்’’ என்றார்.

பின்னர் அவரிடம், ‘‘மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்கிறேன் என்று நீங்கள் சொல்லியும், இதுவரை உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையே என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு மு.க.அழகிரி, ‘‘இதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை’’ என்று பதில் அளித்தார்.

இந்தநிலையில் மு.க.அழகிரி நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தலைவர் கருணாநிதி மரணம் அடைந்த 30–வது நாளையொட்டி தலைவரின் உண்மையான உடன்பிறப்புகளின் வேண்டுகோளை ஏற்று, எனது தலைமையில் மாபெரும் அமைதிப்பேரணி வருகிற 5–ந்தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சிலை அருகில் உள்ள திருவல்லிக்கேணி போலீஸ்நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு, தலைவர் நினைவிடத்தை அடைந்து அங்கு அஞ்சலி செலுத்த உள்ளோம். இப்பேரணியில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தர உள்ள உடன்பிறப்புக்கள், சரியாக காலை 10 மணியளவில் அண்ணா சிலை அருகில் திரண்டிட வேண்டுகிறேன்.

அமைதி பேரணியில் எவ்வித ஆரவார, ஆர்ப்பாட்டத்திற்கும் இடம் கொடுக்காமல் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறு தராமலும் நடந்து கொள்ள வேண்டுகிறேன்.

சென்னை நகருக்குள் காலை 8 மணியளவில் வந்து சேரும் வகையில் பயணத்தை மேற்கொள்வதுடன், வாகனங்களை தீவுத்திடல் மற்றும் மெரினா கடற்கரையின் உட்பகுதிகளில் நிறுத்திவிட்டு, அமைதி பேரணி தொடங்கும் அண்ணாசிலை அருகில் வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் பேரணியில் பங்கேற்க உள்ள சூழ்நிலையில் சென்னை நோக்கி பயணிக்கும் போதும், பேரணி முடிந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பும்போதும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் பயணம் மேற்கொள்ள மிகவும் பாசத்துடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story