திருப்பூர் வர்த்தகத்தை பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரிவடைய செய்துள்ளது - டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேச்சு
மத்தியில் மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் எதிர்காலம் என்பதே இல்லாமல் போய்விடும் என்று திருப்பூரில் நடந்த மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேசினார்.
திருப்பூர்,
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 3–வது மாநில மாநாடு திருப்பூரில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் பேரணி நடைபெற்றது. பேரணியின் போது, வேலை வாய்ப்புகளில் உள்ள இடஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
யூனிவர்செல் தியேட்டர் ரோடு பகுதியில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் குமரன் ரோடு வழியாக டவுன்ஹாலில் சென்று முடிந்தது. இதையடுத்து டவுன்ஹால் மைதனத்தில் பொதுகூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜான்சிராணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேஸ் வரவேற்று பேசினார். நிர்வாகிகள் பகத்சிங், திருப்பதி, செல்வகுமார், பைசா அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., சங்கத்தின் அகில இந்திய செயலாளர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேசிய போது கூறியதாவது:–
நாட்டின் கல்வி, வர்த்தகம் உள்ளிட்ட அனைத்தையும் கடும் சரிவில் மத்திய அரசு கொண்டு சென்று விட்டது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ரூ.1,500 கோடி ஏற்றுமதி முடங்கியுள்ளது. திருப்பூரில் வேலை செய்து வந்த பல வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். திருப்பூர் மட்டுமின்றி சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழில்களும் நலிவடைந்து விட்டது.
நீட் தேர்விலும் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை இல்லை. அதிகார வர்த்தகத்தால் நடத்தப்பட்டதே தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம். தமிழக அரசு பினாமி அரசாகவே உள்ளது. பா.ஜனதா அரசு மக்கள் ஏற்றுக்கொண்டதை மட்டுமல்லாமல் ஏற்றுக்கொள்ளாத வரிவிதிப்புகளையும் திணித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பொருட்களிலும் வரிவிதிக்கப்பட்டுள்ளது. எந்த பொருளாதார வல்லுனர்கள், வங்கி உயர் அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடையவர்களின் ஆலோசனை கேட்காமலே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெருமுதலாளிகளுக்கு மட்டுமே இது தெரிந்திருந்தது. ரூ.1 லட்சம் கோடியை நோக்கி பயணித்த திருப்பூர் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்துள்ளது. இனி மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் எதிர்காலம் என்பதே இல்லாமல் போய்விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.