கேரளாவில் எலி காய்ச்சலுக்கு 53 பேர் சாவு: கூடலூரில் எல்லையோர கிராமங்களில் சுகாதார பணி மேற்கொள்ளப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு


கேரளாவில் எலி காய்ச்சலுக்கு 53 பேர் சாவு: கூடலூரில் எல்லையோர கிராமங்களில் சுகாதார பணி மேற்கொள்ளப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 3 Sept 2018 4:30 AM IST (Updated: 3 Sept 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் எலி காய்ச்சலுக்கு 53 பேர் இறந்துள்ளனர். இதனால் கூடலூரில் எல்லையோர கிராமங்களில் சுகாதார பணி மேற்கொள்ளப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கூடலூர்,

கேரளாவில் பாலக்காடு, வயநாடு, மலப்புரம், எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர் உள்பட 11 மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்தன. தொடர்ந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்து வீடுகள் முழ்கின. இதனால் சுமார் 1½ லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது மழை வெள்ளம் படிப்படியாக வடிந்து வருகிறது. இருப்பினும் முழுமையாக வடியவில்லை.

இதனிடையே மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாம்பு, எலி உள்ளிட்ட சிறு உயிரினங்கள் அனைத்து இடங்களிலும் இறந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ள பாதிப்புகளால் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க சுகாதார துறை அதிகாரிகள் முழு வீச்சில் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் எலி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 53 பேர் எலி காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. கண்களில் வலி, காய்ச்சல், கை– கால்கள் அசதி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் எலி காய்ச்சலாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 2 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதேபோல் மலப்புரம், வயநாடு மாவட்டங்களிலும் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் உள்ளனர். வயநாடு, மலப்புரம் மாவட்டங்களின் எல்லையோரம் கூடலூர் பகுதி உள்ளதால் எலி காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. ஆனால் நீலகிரி மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–

கூடலூரில் உள்ள கேரள எல்லையோர கிராமங்களில் எலி காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே நாடுகாணி, தாளூர், சோலாடி, பாட்டவயல், நம்பியார்குன்னு உள்ளிட்ட சோதனைச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களில் மருந்து தெளிக்கும் பணியை சுகாதாரத்துறையினர் வேகமாக மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கூடலூர் பகுதியில் எலி காய்ச்சல் பரவும் நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சுகாதார பணியை உடனே மேற்கொள்ள முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story