பெங்களூருவில், போதை பொருட்கள் விற்பனை வாலிபர் உள்பட 2 பேர் கைது
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
பெங்களூரு,
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
ரூ.15 லட்சம் மதிப்பு
பெங்களூரு காமாட்சி பாளையா மாருதிநகர் 5-வது மெயின் ரோட்டில் வசிப்பவர் சுரேஷ். இவர் தனது வீட்டில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சுரேஷ் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அவரது வீட்டில் எல்.எஸ்.டி, கஞ்சா, ஹாசிஷ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போதைப்பொருட்களை அவர், தனக்கு தெரிந்தவர்களுக்கும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம்பெண்களுக்கும் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சுரேசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான பல்வேறு வகையை சேர்ந்த போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான சுரேஷ் மீது காமாட்சி பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாலிபர் கைது
இதுபோல, வாலிபர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக பசவேசுவராநகர், 1-வது மெயின் ரோட்டை சேர்ந்த ஆதர்ஷ் (வயது 23) என்பவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தார்கள். இவர், தனக்கு தெரிந்தவர்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து போதைப்பொருட்களை பெங்களூருவுக்கு கடத்தி வந்துள்ளார். பின்னர் அந்த போதைப்பொருட்களை பசவேசுவராநகர், அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் வாலிபர்கள், இளம்பெண்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
அவரிடம் இருந்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள எல்.எஸ்.டி என்ற போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆதர்ஷ் மீது பசவேசுவராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story