கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 3 Sept 2018 3:45 AM IST (Updated: 3 Sept 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் அருகே கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலம் மீனவர் பகுதியில் 250 மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடலில் மீன்பிடிக்கும் தொழிலையே தங்களின் பிரதான தொழிலாக இவர்கள் செய்து வருகின்றனர். இந்த மீனவர் கிராமத்தில் உள்ள அப்துல்கலாம் தெருவில் கடந்த 10 ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த சாலையை கடந்துதான் இவர்கள் மீன்பிடி தொழிலுக்கு கடலுக்கு செல்லவேண்டும்.

இந்த சாலையில் தேங்கி உள்ள கழிவு நீரால் கொசுக்கள் பெருகி, இந்த பகுதியில் பல்வேறு தொற்றுநோய் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த பகுதியில் கழிவு நீர் தேங்குவதற்கு காரணமே, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஒரு பக்கம் தாழ்வாகவும், ஒரு பக்கம் மேடாகவும் சிமெண்டு சாலை அமைத்ததே என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தாழ்வான பகுதியில் எந்நேரமும் கழிவு நீர் தேங்கி இருக்கிறது. பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பட்டிபுலம் ஊராட்சி நிர்வாகம் கழிவுநீர் சாலையில் தேங்காமல் இருப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சுகாதார சீர்கேடு ஒரு புறமிருக்க இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை எனவும், சாலையில் நடந்து செல்லவே மக்கள் அஞ்சுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் விஷ பூச்சிகள் சாலையில் நடந்து செல்லும் மக்களை கடிப்பதாகவும் கூறுகின்றனர்.

கடற்கரை ஒட்டி உள்ள இந்த பட்டிபுலம் கிராமத்தில் சாலை ஓர குப்பைகள் கூட அகற்றப்படுவதில்லை என்றும், சுகாதார வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் ஊராட்சி நிர்வாகம் தங்களை புறக்கணித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே கழிவுநீர் தேங்காதவாறு உயரமான சாலை அமைத்து சுகாதார வசதி செய்து கொடுக்கவும், இரவு நேரத்தில் தெரு விளக்குகள் எரியவும் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பட்டிபுலம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story