தமிழகத்திலேயே நகராட்சிகளில் முதன்முறையாக குமாரபாளையத்தில் புதைவட மின்பாதை அமைக்கும் பணி


தமிழகத்திலேயே நகராட்சிகளில் முதன்முறையாக குமாரபாளையத்தில் புதைவட மின்பாதை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 2 Sep 2018 11:00 PM GMT (Updated: 2 Sep 2018 9:49 PM GMT)

தமிழகத்திலேயே நகராட்சிகளில் முதன்முறையாக குமாரபாளையத்தில் புதைவட மின்பாதை அமைக்கும் பணியை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.

குமாரபாளையம்,

குமாரபாளையம் நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி சாலை விநாயகர் கோவில் அருகில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் ஒருங்கிணைந்த மின்மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் புதைவட மின்பாதை அமைக்கும் பணி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வக்குமார சின்னையன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டு ரூ.25.72 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ள ஒருங்கிணைந்த மின்மேம்பாட்டு பணிகளுக்கு பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார். தமிழகத்திலேயே நகராட்சிகளில் முதன்முறையாக குமாரபாளையத்தில் புதைவட மின்பாதை அமைக்கும் பணி நடக்கிறது. நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி பேசும் போது கூறியதாவது:-

தமிழகத்திலேயே நகராட்சிகளில் முதன்முறையாக குமாரபாளையம் நகராட்சியில் தாழ்வழுத்த புதைவட மின்பாதை அமைக்கும் பணி பூமிபூஜையிட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மின்மாற்றிகள் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடுகின்ற உயரத்தில் இருப்பதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும், புதைவட மின்பாதை அமைத்து தருமாறும் கோரிக்கை வைத்தார்கள். அதை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது எடுத்துரைத்தோம். அவரும் உடனடியாக அப்பணிகளை தொடங்க உத்தரவிட்டார்.

அதன்படி முதற்கட்டமாக 45 கி.மீ. தூரத்திற்கு தாழ்வழுத்த மின்பாதை அமைக்கும் பணியானது சின்னப்ப நாய்க்கன்பாளையம், காந்தி நகர், திருவள்ளுவர் நகர், மேற்கு காலனி, பெருமா பாளையம்புதூர், காவேரிநகர், சேரன்நகர், பெராந்தர்காடு, பாலிகாடு, கலைமகள் வீதி. சுந்தரம் காலனி, அம்மன்நகர், அபேஸ்காலனி, உடையார்பேட்டை, நாரயணநகர், ஜே.கே.கே.நடராஜா நகர், சத்தியாபுரி, தம்மண்ண தெரு மற்றும் கொத்துக்காரன்காடு ஆகிய இடங்களில் முதற்கட்டமாக பணிகள் நடைபெறவுள்ளது. இப்பணிகள் 2 மாதத்திற்குள் முடிவுற்றவுடன் மீதமுள்ள பகுதிகளுக்கும் புதைவடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் நாகராஜன், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் சந்திரசேகர், மேட்டூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி, சங்ககிரி கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம், குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பாலசுப்பிரமணி உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, சத்தீஸ்கார் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் உயர் மின்னழுத்த கோபுரங்கள் மூலமாக விவசாயிகள் பாதிக்காத வகையில் தமிழகத்்திற்கு கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.

இதைத்தொடர்ந்து நாமக்கல்லில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் ஏற்கனவே 2,000 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் தற்போது 4,866 கடைகள் உள்ளன. இதற்கு மேல் புதிய மதுக்கடைகள் திறக்கப்படமாட்டாது, என்றார்.

Next Story