புதிய பாடத்திட்டத்தால் மாணவ-மாணவிகள் கற்றல் திறன் மேம்பாடு


புதிய பாடத்திட்டத்தால் மாணவ-மாணவிகள் கற்றல் திறன் மேம்பாடு
x
தினத்தந்தி 3 Sept 2018 3:15 AM IST (Updated: 3 Sept 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

புதிய பாடத்திட்டத்தை கியூ.ஆர். கோடு முறையில் கற்பிப்பதால் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் மேம்பட்டுள்ள நிலையில், இதற்காக பள்ளிகளுக்கு இணையதள இணைப்பு வழங்க வேண்டும் என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி,


நடப்பு கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் பாடப்புத்தகங்கள் மாற்றப்பட்டு உள்ளன. புதிதாக மாற்றப்பட்ட வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களில் ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும், கியூ.ஆர். கோடு மூலம் பாடம் கற்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதில் கியூ.ஆர். கோடு இடம்பெற்றுள்ள கட்டத்தை ஆன்ட்ராய்டு வசதி கொண்ட செல்போன் அல்லது ‘டேப்’ எனப்படும் சாதனத்தின் மூலம் ஸ்கேன் செய்தால் அந்த பாடங்கள் குறித்த கூடுதல் தகவல்கள், வீடியோ, புகைப்பட விளக்கங்களை அறிய முடியும். இந்த கியூ.ஆர். கோடு முறையிலான பாடப்புத்தகங்கள் மூலம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு ஆன்ட்ராய்டு வசதியுடன் கூடிய ‘டேப்’ சாதனம் வழங்க அரசு திட்டமிட்டது. தேனி மாவட்டத்தில் மொத்தம் 99 அரசு நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 89 பள்ளிகளுக்கு ‘டேப்’ வழங்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்களை கற்பித்து வருகின்றனர். இது மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தி உள்ளதாக ஆசிரியர்கள் தரப்பில் அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்துக்கு அறிக்கைகள் அளிக்கப்பட்டு உள்ளன. அந்த அறிக்கைகளில், ‘கற்றல் எளிதாக இருக்கிறது. கற்றல் உயிரோட்டமாக உள்ளது. வீடியோ மூலம் முழுவிவரம் கிடைப்பதால் மாணவ, மாணவிகள் கவனம் சிதறாமல் ஒருங்கிணைந்து கற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மெல்ல மலரும் மாணவர்களுக்கு பயன் உள்ளதாக உள்ளது’ என்று கூறியுள்ளனர். அதேநேரத்தில் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் இதன் மூலம் பயன்பெற முடியவில்லை. இணையதள இணைப்பு கிடைக்காத கிராமப்புற பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் நேரடியாக இதுபோன்ற கற்றல் அனுபவங்களை பெறுவதில் சிக்கல் உள்ளது. இதுபோன்ற இணையதள இணைப்பு கிடைக்காத பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தாங்கள் வீடுகளில் இருந்து புறப்படும் முன்பே இணையதளம் மூலம் பாடம் சம்பந்தப்பட்ட புகைப்படம், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து எடுத்துச் செல்வதாக தெரிவிக்கின்றனர். அதேபோல், இந்த ‘டேப்’ சாதனத்தை பயன்படுத்த அரசு தரப்பில் இணையதள இணைப்பு எதுவும் வழங்கப்படவில்லை. இதனால், ஆசிரியர்கள் தங்களின் சொந்த பயன்பாட்டுக்கு உள்ள இணையதள இணைப்பையே பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, பள்ளிகளுக்கு என்று இணையதள இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு கூடுதல் ‘டேப்’ சாதனம் வழங்க வேண்டும் என்பதும் ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது. 

Next Story