திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Sept 2018 3:53 AM IST (Updated: 3 Sept 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல், 


திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளுக்கு ஆத்தூர் காமராஜர் அணை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மற்ற மாவட்டங்களில் மழை பெய்த போதும், திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் ஆத்தூர் காமராஜர் அணை வறண்டு வருகிறது. அங்கிருந்து மிகவும் குறைந்த அளவே குடிநீர் எடுக்கப்படுகிறது.

இதனால், நகர் பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகிக்கப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, நகர் முழுவதும் குழாய்கள் பதிக்கப்பட்டு நீண்ட நாட்களாகிவிட்டதால் அவை பழுதடைந்துவிட்டன. இதையடுத்து, ஜிக்கா திட்டத்தின் கீழ் புதிய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, 41-வது வார்டில் ஜின்னா நகர், பூச்சிநாயக்கன்பட்டி மற்றும் ஞானபிரகாசபுரம் ஆகிய பகுதிகளில் புதிய குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதன்காரணமாக அந்த பகுதிகளில் கடந்த 24 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு திண்டுக்கல்-மதுரை சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதன் பேரில், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story