பொதுமக்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


பொதுமக்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 Sep 2018 11:15 PM GMT (Updated: 2 Sep 2018 10:43 PM GMT)

சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர், 

இந்தியாவில் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதற்கு வேகமாக வாகனத்தை ஓட்டுவது, தொடர்ச்சியாக மற்றும் மதுபோதையில் வாகனத்தை ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி செல்லும் போது ஏற்படும் விபத்துகளில் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

ஆனாலும் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சரக்கு ஆட்டோ, மினிலாரி, லாரி உள்ளிட்ட பல்வேறு சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி செல்கின்றனர். துக்க நிகழ்ச்சி, திருமண வரவேற்பு, கோவில் திருவிழா, எருதுவிடும் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் சரக்கு வாகனங்களில் பயணிக்கின்றனர். இவ்வாறாக செல்லும்போது சரக்கு வாகனங்கள் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்கு உள்ளாகும்போது அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் பொதுமக்களை ஏற்றி வரும் சரக்கு வாகன ஓட்டுனருக்கு முதலில் எச்சரிக்கையும், தொடர்ந்து அதேபோன்று செயல்பட்டால் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படியும் போலீசாருக்கு தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து போலீசார் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி செல்பவர்கள் மீது வழக்குப்பதிந்து அபராதம் விதித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘மோட்டார் வாகன சட்டத்தை கடைப்பிடிக்காமல் பொதுமக்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்களை மாவட்டம் முழுவதும் தணிக்கை செய்து பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சரக்கு வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களில் மோட்டார் வாகன சட்டத்துக்கு புறம்பாக பொதுமக்களை ஏற்றி செல்வதையும், அளவுக்கு அதிகமாக கால்நடைகளை ஏற்றி செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Next Story