கம்பம் 18-ம் கால்வாயில் ரேக்ளா பந்தய மாடுகளுக்கு நீச்சல் பயிற்சி


கம்பம் 18-ம் கால்வாயில் ரேக்ளா பந்தய மாடுகளுக்கு நீச்சல் பயிற்சி
x
தினத்தந்தி 3 Sept 2018 3:45 AM IST (Updated: 3 Sept 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் மேற்கு பகுதியில் உள்ள 18-ம் கால்வாயில் ரேக்ளா பந்தய மாடுகளுக்கு நீச்சல் பயிற்சி அழித்தனர்.

கம்பம்,

கம்பம், கூடலூர், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாய தொழிலை சார்ந்து கால்நடை வளர்ப்பிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தமிழர்களின் வீர விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தய போட்டிகளுக்காக காளை மாடுகளை வளர்த்து வருகின்றனர். கோவில் திருவிழா, பொங்கல் திருவிழா, அரசியல் தலைவர்களின் பிறந்தநாள்விழா போன்ற நாட்களில் ரேக்ளா பந்தயம் நடத்தப்படுகின்றது.

இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுகள் வயது வாரியாக தரம் பிரிக்கப்பட்டு, தூரம் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளை பந்தயபிரியர்கள் அதிகவிலை கொடுத்து வாங்குகின்றனர். எனவே போட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கு, சோள நாற்று, பருத்திக்கொட்டை, பேரீச்சம்பழம் என உணவுக்கட்டுப்பாடுடன் நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி என புத்துணர்வு பயிற்சியும் வழங்கப்படுகிறது.

இப்பகுதியிலுள்ள மாட்டு உரிமையாளர்கள் மாடுகளை, போட்டிகளுக்கு முன்பும், போட்டியில் கலந்து கொண்ட பின்னும் ஆற்று நீரில் நீச்சலுக்கு விடுகின்றனர். இதைத்தொடர்ந்து கம்பம் மேற்கு பகுதியில் உள்ள 18-ம் கால்வாயில் ரேக்ளா பந்தய மாடுகளின் கழுத்துக்கயிறை பிடித்துக்கொண்டு உரிமையாளர்கள் தண்ணீரில் நீச்சல் பயிற்சி அளிக்கின்றனர். சுமார் அரைமணி நேரம் ஆற்று தண்ணீரில் மாடுகளை நீச்சலடிக்க விடுவதால் மாடுகளுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும், பந்தயங்களில் மாடுகளுக்கு அசதி ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர். 

Next Story