ஏரியில் மண் சரிந்து விழுந்து கோவில் பூசாரி பலி


ஏரியில் மண் சரிந்து விழுந்து கோவில் பூசாரி பலி
x
தினத்தந்தி 3 Sept 2018 3:30 AM IST (Updated: 3 Sept 2018 5:38 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சனூர் அருகே மண் சரிந்து விழுந்ததில் கோவில் பூசாரி பலியானார். சுரங்கம்போல் பள்ளம் தோண்டி மணல் கடத்ததில் ஈடுபட்டபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

செஞ்சி, 

கஞ்சனூர் அருகே உள்ள முட்டத்தூர் ஏரியில் அனுமதியின்றி சிலர் மண் அள்ளி செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மண் திருட்டுக்கும்பல் ஏரியில் மண் எடுக்க பள்ளம் தோண்டியபோது ஆற்று மணல் கிடைத்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த மண் திருட்டில் ஈடுபட்டவர்கள் பள்ளத்தை சுரங்கம்போல் குடைந்து மணலை அள்ளி வாகனங்கள் மூலம் கடத்தி சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை அதேஊரை சேர்ந்த ஆஞ்சநேயர் கோவில் பூசாரி அய்யனார்(வயது 50) மற்றும் பசுபதி, பூஞ்சோலை, கோவிந்தன் ஆகியோர் ஏரியில் சுரங்கம்போல் உள்ள பள்ளத்துக்குள் சென்று மணலை அள்ளி வெளியே எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அய்யனார் மீது மண் சரிந்து விழுந்தது. இதைபார்த்த பசுபதி, பூஞ்சோலை, கோவிந்தன் ஆகியோர் அங்கிருந்து வெளியே தப்பி வந்து விட்டனர். அய்யனார் மண்ணில் சிக்கிக் கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மண்ணில் சிக்கிய அய்யனாரை மீட்டபோது, அவர் இறந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கிராம மக்கள் மணல் கடத்தலை போலீசார் தடுத்திருந்தால், உயிரிழப்பை தடுத்திருக்கலாம் என கூறியும், மணல் கடத்தலை தடுக்காமல், மணல் திருட்டு கும்பலுக்கு உடந்தையாக இருந்த கஞ்சனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திடீரென அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் கஞ்சனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இதுபற்றி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனிடையே மண் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த அய்யனாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகவும் மணல் கடத்தலை தடுக்க தவறியதாகவும் கஞ்சனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கத்தை ஆயுத படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார். 

Next Story