கல்வித் தேடலை எளிதாக்கும் மின்னணு நூலகங்கள்!


கல்வித் தேடலை எளிதாக்கும் மின்னணு நூலகங்கள்!
x
தினத்தந்தி 3 Sept 2018 3:56 PM IST (Updated: 3 Sept 2018 3:56 PM IST)
t-max-icont-min-icon

இது இணைய யுகம். இங்கு எதையும் தேடிப் பெறுவது எளிது. மாணவர்களுக்கும் இணையம் பல வகையில் பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக கல்வி சார்ந்த எதையும் தேடிப்பயன்படுத்தும் ‘இ-லைப்பிரரி’ எனும் மின்னணு நூலகங்கள் பெருகிவிட்டன.

கல்லூரி நூலகத்தில் வரிசைப்படுத்தப்பட்ட புத்தகங்களில் நமக்கு அவசியமானதை தேடிக் கொண்டிருப்பதைவிட, அதே நூல், உலகத்தில் எத்தனை நூலகங்களில் இருக்கிறது என்பதை இணையத்தில் தேடிப் பார்த்துவிடலாம். இந்தியா மற்றும் உலக நாடுகளில் சிறந்த இ-நூலக அப்ளிகேசன்கள் பற்றி பார்ப்போம்...

தேசிய நூலகம்

மத்திய அரசு, இந்திய மின்னணு நூலகத்தை உருவாக்குவதற்காக காரக்பூர் ஐ.ஐ.டி. பொறியாளர்கள் குழுவினருடன் பெருமுயற்சி எடுத்தது. அதன் பயனாக கடந்த ஆண்டு ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வெளியிடப்பட்டது. அதில் சுமார் 6½ லட்சம் நூல்கள் மின்னணு மயமாக்கப்பட்டு இலவசமாக படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

முக்கியமாக இதில் மாநிலங்களின் கல்வி வாரிய நூல்கள், மத்திய கல்வி வாரிய நூல்கள், ஆராய்ச்சி கட்டுரைகள், ஜே.இ.இ., கேட், யு.பி.எஸ்.சி. உள்ளிட்ட முக்கிய தேர்வுகளுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்த அனைத்து நூல்களும் மின்னணு மயமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அப்ளிகேசனை இந்தி, ஆங்கிலம் மற்றும் பெங்காலி ஆகிய 3 மொழிகளில் பயன்படுத்த முடியும். ஒவ்வொரு பாடத்துறைகள் சார்ந்த நூல் களையும், பொது நூல்களையும், கதைகளையும் தனித்தனியே தேடி அறிய முடியும். ஆப்பிள் பிளே ஸ்டோர் வழியாக National Digital Library of India அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இப்போது ஐ.ஓ.எஸ். சாதனங்களிலும் இது செயல்படும்.

ஓவர் டிரைவ் (OverDrive)

உலகின் 30 ஆயிரம் பொது நூலகங்களை ஒருங்கிணைத்த அப்ளிகேசன் இது. அத்தனை நூலகங்களில் உள்ள நூல்களும் மின்மயமாக்கப்பட்டுள்ளன. ஏராளமான புத்தகங்கள் ஆடியோ புத்தகமாகவும், வீடியோக்களாகவும் கிடைக்கும். பல வரிசைகளில் தேடிப் படிக்கலாம்.

பிளேபுக்ஸ்

கூகுள் நிறுவனமும் புத்தகப் பிரியர்களுக்காக கூகுள் பிளே புக்ஸ் (Google Play Books) என்ற அப்ளிகேசனை வழங்குகிறது. உலகின் புகழ்பெற்ற பல லட்சம் புத்தகங்களை இங்கே படிக்கலாம். ஆப்லைனிலும் படிக்க முடிவது சிறப்புக் குரியதாகும்.

ஐ-ரிசர்ச்

அமெரிக்காவின் இயற்பியல் மையம் உருவாக்கியுள்ள ஆராய்ச்சி நூலகம் இது. இயற் பியல் ஆய்வு சார்ந்த பயனுள்ள கட்டுரைகளும், நூல்களும் படிக்கலாம்.

என்.ஒய்.பி.எல். பிபிலியன் (NYPL Biblion)

நியூயார்க் பொது நூலகத்தின் டிஜிட்டல் அப்ளிகேசன் இது. உலகின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான இதில் அளவற்ற புத்தகங்களையும், வீடியோக்கள், கோப்புகளை படிக்க முடியும்.

ஐ.எஸ்.எஸ்.ஆர்.என் (iSSRN)

சமூக அறிவியல் ஆராய்ச்சி கூட்டமைப்பின் அப்ளிகேசன் இது. சமூக அறிவியல், வரலாறு, உளவியல், சோசியல் சயின்ஸ் அண்ட் ஹியூமனிட்டிஸ் படிப்பவர்களுக்கான பயனுள்ள தகவல்களை இதில் படிக்க முடியும். 2 லட்சத்து 60 ஆயிரம் ஆராய்ச்சி கட்டுரைகள் இதில் வெளியிடப்பட்டுள்ளன.

பப்மெட் (PubMed)

அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகம் உருவாக்கியுள்ள இணைய பக்கம் இது. 2 கோடிக்கும் மேற்பட்ட மருத்துவ இதழ் கட்டுரைகள் இதில் உள்ளன. இதை பயன்படுத்த குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும்.

பிரிட்டிஷ் லைப்ரரி

இங்கிலாந்தின் இணைய நூலகம் இது. 60 ஆயிரம் தலைப்புகளில் பல லட்சம் நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அனைத்து புத்தகங்களும் இதில் சங்கமிக்கின்றன.

குட் ரீட்ஸ் (Goodreads)

உலகம் முழுவதும் 4 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களைக் கொண்ட இ-புக் அப்ளிகேசன் இது. புத்தகப் பிரியர்கள் சுவைக்க ஏராளமான புத்தகங்கள் உண்டு. விமர்சனங்களை பதிவு செய்யலாம்.

மீ இ-ஜீனியஸ் (MeeGenius)

குழந்தைகளுக்கான இ-நூலகம் இது. 300 விதமான தலைப்புகளில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

ஐ.சி.டி.எல்.

குழந்தைகளுக்கான சர்வதேச டிஜிட்டல் நூலக அப்ளிகேசன் இது. 60-க்கும் மேற்பட்ட நாடுகளின் பொது நூல்கள் குழந்தைகளுக்காக ஒருங்கிணைத்து வழங்கப்படுகின்றன.

குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்ட அப்ளிகேசன்களில் ஒன்று வாட்பேடு (Wattpad), இதில் 7½ கோடி கதைகள், நாவல்கள் உள்ளன. சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் படித்து ரசிக்கலாம்.

புக்படி லைட் (BookBuddy Lite)

இ-புத்தகங்களை படிக்கவும், சமூக வலைத் தளங்கள் போல பகிர்ந்து கொள்ளவும் உதவும் சமூக புத்தக தளம் இது. இதில் உங்கள் விருப்பப்படியான புத்தக வரிசையை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

கிண்டில்

அமேசான் நிறுவனத்தின் கிண்டில் அப்ளி கேசன் வழியே புத்தகங்கள், பருவ இதழ்கள், செய்தித் தாள்கள் பலவற்றையும் படிக்கலாம்.

Next Story