மீண்டும் உயிர்த்தெழுந்த பால்வீதி விண்மீன் திரள்!
மரணம் என்பது ஒரு முற்றுப்புள்ளி என்றே நம்மில் பலரும் நம்பி வருகிறோம், வாழ்கிறோம். ஆனாலும் மரணத்துக்குப் பின்னர் நாம் ஒன்று சொர்க்கத்துக்கு போவோம் அல்லது நரகத்துக்கு போவோம் என்றும் ஒரு நம்பிக்கை நம்மில் பலரிடமும் இருப்பதும் உண்மையே.
‘நான் செத்துப் பிழைச்சவன்டா, எமனைப் பார்த்துச் சிரிச்சவன்டா’ என்றொரு பாடல் வரியை நம்மில் பலரும் கேட்டிருப்போம்.
ஆனால், மாயாஜால வித்தகர்களைத் தவிர்த்து, அப்படி செத்துப் பிழைத்த மனிதர்கள் என்று இதுவரை யாரையும் இந்த உலகம் கண்டதில்லை! மிகவும் சுவாரசியமாக, ‘செத்துப் பிழைத்த மனிதர்களைத் தானே நீங்கள் பார்த்ததில்லை, நம் பால்வீதி விண்மீன் திரளே செத்துப் பிழைத்து வந்ததுதான் தெரியுமா?’ என்கிறது ஜப்பானில் உள்ள தொஹோக்கு பல்கலைக் கழகத்தின் விண்வெளி ஆய்வாளர் நோகுச்சி மாசாபுமியின் சமீபத்திய ஆய்வு ஒன்று!
நம் பால்வீதி விண்மீன் திரளில் உள்ள நட்சத்திரங்களின் ரசாயன மூலக்கூறுகள் என்ன என்பதைக் கண்டறியும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், பால்வீதி விண்மீன் திரளானது அண்டப் பெருவெளியில் ஒரு முறை இறந்து பின் மீண்டும் உயிர்த்து எழுந்து வந்துள்ளது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் நோகுச்சி தலைமையிலான ஆய்வாளர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சுவாரசியமாக, நம் பால்வீதி விண்மீன் திரளின் பெரும்பகுதியில் உள்ள சூரியன் உள்ளிட்ட நட்சத்திரங்களை, அவற்றில் உள்ள ரசாயன மூலக்கூறுகளின் அடிப்படையில் இரண்டு குழுவாக பிரிக்கலாம். முதல் குழுவில் ஆல்பா தனிமங்கள் என்று அழைக்கப்படும் ஆக்சிஜன், மெக்னீசியம் சிலிக்கான், சல்பர், கால்சியம் மற்றும் டைட்டேனியம் ஆகிய தனிமங்கள் அதிக அளவில் இருக்கும். இரண்டாவது குழுவில் ஆல்பா தனிமங்கள் குறைவாகவும், இரும்பு மிகவும் அதிக அளவிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நம் பால்வீதி போன்ற ஒரு விண்மீன் திரளில் இரண்டு வகையான தனிமக் கலவைகள் கொண்ட நட்சத்திரக் குழுக்கள் இருப்பதற்கு ஏதோ ஒரு இயற்பியல்/அறிவியல் காரணம் இருக்கிறது. ஆனால் அது என்னவென்று/அத்தகைய இருவேறு தனிமக் கலவைகள் எப்படி உருவாகி இருக்கும் என்று இதுவரை விண்வெளி ஆய்வாளர்களால் கண்டறிய முடியவில்லை பால்வீதி விண்மீன் திரளில் இருவேறு வகையான தனிமக் கலவைகள் கொண்ட இரு நட்சத்திரக் குழுக்கள் இருப்பதற்கான காரணத்தை விளக்கும், விவரிக்கும் ஒரு கருதுகோள் ஒன்றை வானியலாளர் மாசாபுமி நோகுச்சி உருவாக்கியிருக்கிறார்.
நோகுச்சியின் கருதுகோளின்படி, பால்வீதி விண்மீன் திரளில் உள்ள இரண்டு நட்சத்திரக் குழுக்களும் நட்சத்திர தோற்றத்தின் இரு வெவ்வேறு காலகட்டத்தை சுட்டிக்காட்டுகின்றன என்றும், அந்த இரு காலங்களுக்கும் நடுவில் நட்சத்திரங்கள் தோன்றாத அல்லது நட்சத்திர தோற்றம் இல்லாத ஒரு அமைதியான காலகட்டம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. சுவாரசியமாக, விண்மீன் திரள் தோற்றத்தை விவரிக்கும் ‘குளிரோட்ட விண்மீன் திரள் குவிதல் (cold flow galactic accretion)’ எனும் கருதுகோள் ஒன்று, கடந்த 2006-ல் சில வானியல் ஆய்வாளர்கள் முன்வைக்கப்பட்டது.
அடிப்படையில், விண்மீன் திரள் தோற்றம் தொடர்பான குளிரோட்ட கருதுகோள் என்பது பால்வீதியை விட மிகப்பெரிய விண்மீன் திரள்கள், அவற்றில் உள்ள நட்சத்திரங்கள் இரண்டு படிநிலைகளில் உற்பத்தி ஆவதன் காரணமாகவே தோன்றுகின்றன என்று விளக்கவே முதலில் பயன்படுத்தப்பட்டது. சுவாரசியமாக, நம் பால்வீதி விண்மீன் திரளில் உள்ள நட்சத்திரங்கள் இரண்டு வெவ்வேறு தனிமக் கலவைகள் கொண்டு இருப்பதால், பால்வீதியும் குளிரோட்ட கருதுகோளின் அடிப்படையிலேயே உருவாகியிருக்கலாம் என்று தான் நம்புவதாகக் கூறுகிறார் வானியலாளர் நோகுச்சி.
மிகவும் சுவாரசியமாக, நட்சத்திரங்களின் ரசாயனக் கலவையின் தன்மை/இயல்பானது நட்சத்திரங்கள் உருவாகக் காரணமான வாயுக் களைப் பொறுத்தே அமைகிறது. மேலும், நட்சத்திரங்கள் இல்லாத தொடக்ககால பிரபஞ்சத்தில், கன உலோகங்கள் எதுவும் இருக்கவில்லை. ஏனெனில், நாமறிந்த கன உலோகங்கள் அனைத்துமே நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும் வானியல் நிகழ்வான ‘சூப்பர்நோவா’ எனும் நிகழ்வின்போதே உற்பத்தியாயின என்கிறது வானியல்!
நோகுச்சியின் கருதுகோளின்படி, விண்மீன் திரள் தோற்றத்தின் முதல் நிலையில், ஒரு விண்மீன் திரளானது அண்டவெளியில் உள்ள குளிர்ந்த வாயுக்களை ஒன்று திரட்டி ஓரிடத்தில் குவிகின்றன என்றும், அத்தகைய வாயுக்கள் ஒன்று கலப்பதால் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன என்றும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, சுமார் ஒரு கோடி ஆண்டுகளுக்கு பிறகு, விண்மீன் திரளில் உள்ள சில நட்சத்திரங்கள் இரண்டாம் வகை சூப்பர்நோவேயில் இறந்துவிடுகின்றன என்றும், அதிலிருந்தே ஆல்பா தனிமங்கள் வெளியாகி பால்வீதி விண்மீன் திரள் முழுக்க பரவியது மட்டுமல்லாமல் அதன்பிறகு தோன்றிய புதிய நட்சத்திரங்களில் உட்புகுத்தப்பட்டன என்றும் கூறுகிறது நோகுச்சியின் கருதுகோள்!
அதனைத்தொடர்ந்து, சுமார் 300 கோடி ஆண்டுகள் வரை பெரிதாகிக்கொண்டே இருந்த பால்வீதியில், சுமார் 700 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெப்பப் புயலின் காரணமாக வாயு ஓட்டம் நின்றுபோகவே, சுமார் 200 கோடி ஆண்டுகள் பால்வீதியில் நட்சத்திர உற்பத்தி நின்று போனது என்கிறது நோகுச்சியின் கருதுகோள். 200 கோடி ஆண்டுகால இறுதியில், டைப் 1a சூப்பர்நோவா ஒன்று ஏற்படவே, அதில் இரும்பு உற்பத்தியாகி அந்த இரும்புக்குழம்பானது நட்சத்திரங்களுக்கு இடையிலான அண்டவெளி முழுக்க பரவியது என்றும், அதன்பிறகு, அதாவது சுமார் 500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மீண்டும் நட்சத்திரங்கள் உற்பத்தியாகும் அளவுக்கு வாயுக்கள் குளிர்ந்து போகவே, பால்வீதியில் இரும்பு நிறைந்த, சுமார் 460 கோடி ஆண்டுகள் வயதான நம் சூரியன் உள்ளிட்ட, இரண்டாம் சந்ததி நட்சத்திரங்கள் உற்பத்தியாயின என்றும் கூறுகிறது நோகுச்சியின் கருதுகோள்.
இந்த கருதுகோள் மேலதிக ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்படும் பட்சத்தில், மிகப்பெரிய விண்மீன் திரள்களின் பரிணாம வளர்ச்சியில் நட்சத்திரங்கள் தோன்றாத ஒரு ‘மலடி’ காலகட்டம் அல்லது இறந்த நிலை ஒன்று இருக்கிறது என்பது திட்டவட்டமாக உறுதி செய்யப்படும் என்கிறார் மாசாபுமி நோகுச்சி!
Related Tags :
Next Story