வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்று அ.தி.மு.க.செயல்வீரர் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
ஆனைமலை,
வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனைமலையில் அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான இந்த ஆயத்த கூட்டத்திற்கு வால்பாறை தொகுதி கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் கார்த்திக் அப்புசாமி (மேற்கு), சுந்தரம் (கிழக்கு), துணைச் செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்று பேசினார். மகேந்திரன் எம்.பி. பேசும்போது கூறியதாவது:–
வால்பாறை சட்டமன்ற தொகுதி கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தியதின் பேரில் ஆனைமலை பகுதி தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை பகுதியில் உள்ள முக்கோணம் பகுதியில் இருந்து பூலாங்கிணறு, எரிசனம்பட்டி, தேவனூர்புதூர் பகுதி வழியாக நா.மூலைசுங்கம், ஆனைமலை முக்கோணம் வரை ரோடு 7.5 மீட்டருக்கு அகலப்படுத்தப்படும். இந்த பகுதியில் கொப்பரைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுவதைக்கண்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.75 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசிடம் பேசி கிலோ ஒன்றுக்கு ரூ.140 கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு மத்திய அரசிடம் இருந்து பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக ரூ. 5 ஆயிரம் கோடிநிதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசும்போது கூறியதாவது:–
பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தை விட இங்கு நடைபெறும் கூட்டம் ஒருமாநாடு அளவிற்கு காட்சியளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் சகோதரர்கள்போல் இணைந்து மக்கள் பணியாற்றி வருகின்றனர். மு.க.ஸ்டாலின் தி.மு.க. எனும் கட்சிக்குதான் தலைவராகியுள்ளார். ஆனால் அவர் தமிழகத்தின் முதல்வராகவே ஆகிவிட்டதுபோல் பேசி வருவது நல்லதல்ல. அ.தி.மு.க. வில் வாரிசு அரசியல் கிடையாது. குடிநீர், திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள், சாலை, பாலங்கள் அமைத்தல் ஆகிய அனைத்திலும் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை மக்கள் நன்கு அறிவர். மகளிர் மேம்பாட்டுக்காக தி.மு.க.வின் 5 ஆண்டுகால ஆட்சியில் ரூ. 9 ஆயிரத்து 82 கோடிதான் கடன் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், அதனைவிட 3 மடங்கு அதிகமாக அதாவது ரூ.27 ஆயிரத்து 471 கோடிக்கு கடன் வழங்கியுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன் .
ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) வழங்குவதில் முறைகேடு என்றெல்லாம் சிலர் புகார் கூறி வருகின்றனர். அ.தி.மு.க. அரசை பொறுத்தவரை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட்டு வருகிறோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களிடம் நாம் செய்துள்ள பணிகளை கூறி உரிமையோடு வாக்கு கேட்கலாம். அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களை அரவணைத்து ஒன்றிணைந்து செயல்பட்டால் 39 தொகுதிகளிலும் வெற்றி நமக்கே. நமக்கு எதிரி தி.மு.க. தான். டி.டி.வி. தினகரன் எல்லாம் நம் கணக்கிலேயே இல்லை. அவர் ஒரு சிறு கூட்டத்தை வைத்துக்கொண்டு ஆட்சியை பிடித்து விடுவேன் என்று பேசிவருவதை யாரும் பொருட்படுத்த வேண்டியதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.