சாத்தூர் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாமல் பயணிகள் அவதி
சாத்தூர் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதியின்றி பயணிகள் அவதிப்படும் நிலை உள்ளது.
சாத்தூர்,
சாத்தூர் பிரதான சாலையில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது பெரும் இட நெருக்கடியோடு செயல்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படாததால் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக இருக்கை வசதிகள் இல்லாததால் பயணிகள் நீண்ட நேரம் நிற்க வேண்டியுள்ளது. இருக்கை வசதி இல்லாததால் பெரும்பாலான பயணிகள் மேற்கூரைக்காக அமைக்கபட்டுள்ள தூண்களில் உட்கார்ந்தும், சில பயணிகள் தரையில் அமர்ந்தும் பஸ்சுக்கு காத்திருக்கின்றனர்.
மேலும் பயணிகளின் குடிநீர் வசதிக்காக குடிநீர்தொட்டி அமைக்கபட்டிருந்தும் குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் பயணிகள் குடிநீரை பருகுவதற்கு தயங்கி வருகின்றனர். மாவட்டத்தில் பெரும்பாலான பஸ் நிலையங்களில் பயணிகள் அமர்வதற்கு வசதியாக இருக்கைகள், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போன்று சாத்தூர் பஸ் நிலையத்திலும் செய்து கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.அங்குள்ள பொது சுகாதார வளாகமும் சரிவர பராமரிப்பு இல்லாமல், பயன்பாடு இல்லாமல் உள்ளது. பஸ் நிலையத்தில் வணிக வளாகத்தின் பின்புறத்தில் திறந்த வெளியை பயன்படுத்தும் நிலைமை உள்ளது.
பிரசித்தி பெற்ற இருக்கன்குடி கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாத்தூர் வந்துதான் செல்ல வேண்டியுள்ளது. வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வரும் நிலையில் இங்கு இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பஸ்சுக்கு காத்திருக்கும் பக்தர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் அடிப்படை வசதி செய்து தர வேண்டியது அவசியமாகும். இதில் நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி அடிப்படை வசதிகள் செய்வதற்க்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.