தமிழகம் முழுவதும் வரும் காலங்களில் குடிநீருக்கு கடும் பிரச்சினை ஏற்படும் - டாக்டர் அன்புமணி ராம்தாஸ் குற்றச்சாட்டு


தமிழகம் முழுவதும் வரும் காலங்களில் குடிநீருக்கு கடும் பிரச்சினை ஏற்படும் - டாக்டர் அன்புமணி ராம்தாஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Sept 2018 5:15 AM IST (Updated: 3 Sept 2018 9:39 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் நீர் ஆதாரங்கள், ஆறுகள், குளங்கள், கண்மாய்கள் தூர்ந்து போய்விட்டன. இதனால் எதிர்வரும் காலத்தில் குடிநீருக்கே கடும் பிரச்சினை ஏற்படும் டாக்டர் அன்புமணி ராம்தாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.

ராமநாதபுரம்,

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வைகையை காப்போம் வறட்சியை விரட்டுவோம் என்ற தலைப்பில் ராமநாதபுரம் சந்தை திடலில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுசெயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஹக்கீம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவரும், தருமபுரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

 வைகை ஆற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கடந்த 2 நாட்களாக பொதுமக்களிடம் விளக்கி கூறி பிரசாரம் செய்துள்ளேன். வைகை ஆறு அழிவின் விளிம்பில் உள்ளது. அதனை காப்பாற்றாவிட்டால் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்படும். தமிழக வரலாறுகளில் அதிகமாக எழுதப்பட்ட ஆறு வைகை. ஆனால் இந்த தலைமுறையினருக்கு வைகையில் தண்ணீர் இல்லை.

40 ஆண்டுகளுக்கு முன்பு 3 போகம் விளையக்கூடிய பூமியாக ராமநாதபுரம் திகழ்ந்தது. வைகை அணை கட்டப்பட்டு தண்ணீர் தடுத்து நிறுத்தப்பட்டதால் ராமநாதபுரம் வறட்சி பகுதியாகி விட்டது. இருந்தாலும் ராமநாதபுரத்திற்கு வைகை தண்ணீரை 7 பாகம் வழங்க வேண்டும் என்று அப்போதைய முதல்–அமைச்சர் காமராஜர் ஒப்பந்தம் போட்டு வைத்துள்ளார்.

அதன்படி ராமநாதபுரத்திற்கான தண்ணீர் பங்கினை விடுவிக்க வேண்டும். நீர் மேலாண்மை என்றால் என்னவென்றே தெரியாத அரசுகளால் கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் நீர் ஆதாரங்கள், ஆறுகள், குளங்கள், கண்மாய்கள் தூர்ந்து போய்விட்டன. எதிர்வரும் காலத்தில் குடிநீருக்கே கடும் பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளது.

போதிய அளவு மழைபெய்தும் அதனை தேக்கி வைக்க கட்டமைப்பு இல்லை. இலவச திட்டங்களுக்கு செலவழித்த தொகையை நீர்மேலாண்மை திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் தமிழகம் நீர்மிகை மாநிலமாக மாறி பக்கத்து மாநிலங்களிடம் தண்ணீர் கேட்கும் நிலையே வந்திருக்காது. வைகை காக்க மூல வைகை, மேகமலை, வெள்ளிமலை பகுதிகளை புலிகள் காப்பகமாக மாற்ற வேண்டும். மதுரை மாநகராட்சி கழிவுகள் வைகையில் கலப்பதை தடுக்க வேண்டும். ஆற்றுக்குள் உள்ள கருவேல மரங்களை பயலாஜிக்கல் பக் முறை மூலம் அகற்ற வேண்டும். மானாமதுரை பகுதியில் மணல் கொள்ளையால் வைகை ஆறு காணாமல் போய்விட்டதை மீட்க வேண்டும்.

முல்லை–பெரியாறு அணை நிரப்பியதால் தான் கேரளா வெள்ளத்தில் மூழ்கியதாக கேரளா முதல்வர் கூறியிருப்பது தவறானது. காவிரி, குண்டாறு இணைப்பு திட்டம் உள்பட 20 நீர்பாசன திட்டங்கள் நிலுவையில் உள்ளன. அவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும். வைகை அணையை தூர்வார வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளில் குறிப்பாக நாகை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

இது விவசாயிகளுக்கு செய்யும் துரோகமாகும். மத்திய அரசின் கொள்கை முடிவின்படி பொதுவினியோக மையங்களை மூடுவதற்கு தமிழக அரசு சம்மதிக்கக்கூடாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பா.ம.க. பெரிய அளவில் போராட்டத்தினை நடத்தும். குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசின் பினாமி ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து வருகிறது. ஊழலுக்கு எதிரானவர் என கூறும் மோடி தமிழகத்தில் நடைபெறும் ஊழல் ஆட்சியை ஆதரித்து வருகிறார். தமிழக மீனவர்களை பாதிக்க கூடிய இலங்கை அரசின் படகுகளை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது போன்ற சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.


Next Story