பெண்ணிடம் நகையை பறித்து விட்டு கழுத்தை அறுத்து கொலை


பெண்ணிடம் நகையை பறித்து விட்டு கழுத்தை அறுத்து கொலை
x
தினத்தந்தி 4 Sept 2018 3:00 AM IST (Updated: 4 Sept 2018 5:43 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே பெண்ணிடம் நகையை பறித்துவிட்டு அவரது கழுத்தை அறுத்து மர்மநபர்கள் கொலை செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

கண்டாச்சிமங்கலம்,

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த தியாகதுருகம் அருகே உள்ள பெரியமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 31), கொத்தனார். இவருடைய மனைவி லதா(27). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இந்த நிலையில் லதா நேற்று மாலை அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள கரும்பு தோட்டத்துக்குள் மறைந்திருந்த 6 பேர், திடீரென அங்கு வந்து லதாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.

இதனால் திடுக்கிட்ட லதா திருடன்.. திருடன்... என்று சத்தம் போட்டார். அதற்குள் அவர்கள் லதாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் சங்கிலியை பறித்தனர். மேலும் இவர் தங்களை அடையாளம் காட்டி விடுவாறோ என்று அறிந்த அந்த மர்மநபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், அறுத்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதற்கிடையே வயலுக்கு சென்ற லதா இரவு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவருடைய மாமனார் தாரங்கபாணி, லதாவை தேடி நிலத்துக்கு சென்றார். அப்போது நிலத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் லதா துடிதுடித்துக்கொண்டிருந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த தாரங்கபாணி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் லதாவை மீட்டு சிகிச்சைக்காக தியாகதுருகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு லதா கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே லதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பெரியமாம்பட்டு பஸ்நிறுத்தம் அருகே திரண்டனர். இதையடுத்து லதாவின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி இறந்த லதாவின் உடலுடன் சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறத்திலும் அவருடைய உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உள்ளூரை சேர்ந்த நபர்கள் தான் லதாவின் கழுத்தில் இருந்த நகையை பறித்து, அவரை கொலை செய்திருக்க வேண்டும், எனவே லதாவை கொலை செய்தவர்களை கைது செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர்.

இதையடுத்து போலீசார் கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்து விட்டோம், மற்றவர்களை உடனடியாக கைது செய்து விடுவோம். எனவே நீங்கள் மறியலை கைவிட்டு செல்லுங்கள் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகைக்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story