தூத்துக்குடியில் போலீஸ் தேர்வுக்கு உடற்கூறு தகுதி தேர்வு தொடங்கியது
தூத்துக்குடியில் நேற்று போலீஸ் தேர்வுக்கான உடற்கூறு தகுதி தேர்வு தொடங்கியது. தேர்வு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படுகிறது.
தூத்துக்குடி,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல்துறை 2-ம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான எழுத்து தேர்வு நடந்தது. தூத்துக்குடியில் நடந்த எழுத்து தேர்வில் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 1,486 ஆண்களும், 613 பெண்களும் தேர்ச்சி பெற்றனர். இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான உடற்கூறு தகுதி தேர்வுகள் நேற்று காலை தூத்துக்குடி தருவை மைதானத்தில் தொடங்கியது. இந்த உடற்கூறு தகுதி தேர்வுகள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி வரும் 7-ந்தேதி(வெள்ளிக்கிழமை) வரை நடக்க உள்ளது.
இந்த தேர்வுகளை நெல்லை சரக டிஐஜி கபில்குமார் சரத்கர், மாநகர போலீஸ் கமிஷனர் மகேந்திரகுமார் ரத்தோட் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று காலையில் தேர்வர்களுக்கு உயரம் அளத்தல், மார்பளவு அளத்தல் ஆகியவையும் நடந்தது.
பின்னர் அவர்களுக்கு 1,500 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டன. இந்த உடற்கூறு தகுதி தேர்வுகள் போலீசாரால் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த தேர்வுகளுக்கான பணியில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், அமைச்சு பணியாளர்கள் என 300 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதனை முன்னிட்டு தேர்வு நடக்கும் தருவை விளையாட்டு மைதானத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story