உடன்குடி, சாத்தான்குளம் பகுதி குளங்கள் நிரம்பும் வரை சடையநேரி கால்வாயில் தண்ணீர் விட வேண்டும்


உடன்குடி, சாத்தான்குளம் பகுதி குளங்கள் நிரம்பும் வரை சடையநேரி கால்வாயில் தண்ணீர் விட வேண்டும்
x
தினத்தந்தி 4 Sept 2018 3:15 AM IST (Updated: 4 Sept 2018 12:14 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பும் வரையிலும், சடையநேரி கால்வாயில் தண்ணீர் விட வேண்டும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்து உள்ளார்.

உடன்குடி,


தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் முதல் தடுப்பணையான மருதூர் மேலக்கால் மூலம் பாசன வசதி பெறும் பிரதான குளங்களான சடையநேரிகுளம், புத்தன்தருவைகுளத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. மெஞ்ஞானபுரம் அருகே ராமசுப்பிரமணியபுரத்தில் சடையநேரி கால்வாயில் இருந்து சடையநேரி குளத்துக்கும், புத்தன்தருவை குளத்துக்கும் தண்ணீர் பிரிந்து செல்கிறது. இதனை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. நேற்று மதியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வறட்சி மிகுந்த பகுதிகளான உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளில் ஆண்டுதோறும் மழை அளவு குறைந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடியில் கடல்நீர் உட்புகுந்ததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி, வீணாக கடலுக்கு சென்ற தண்ணீர் சடையநேரி கால்வாயில் திறந்து விடப்பட்டு உள்ளது.
எனவே உடன்குடி யூனியனில் உள்ள சடையநேரிகுளம், தாங்கைகுளம், சாத்தான்குளம் யூனியனில் உள்ள புத்தன்தருவைகுளம், வைரவன்தருவைகுளம் ஆகியவை முழுவதுமாக நிரம்பும் வரையிலும் சடையநேரி கால்வாயில் தண்ணீர் விட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story