ஊட்டி நகரில் உலா வந்த காட்டெருமையால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது


ஊட்டி நகரில் உலா வந்த காட்டெருமையால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது
x
தினத்தந்தி 4 Sept 2018 4:15 AM IST (Updated: 4 Sept 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகரில் உலா வந்த காட்டெருமையால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. அதனை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதிகளை கொண்டது. ஊட்டியை சுற்றிலும் வனப்பகுதிகள் அதிகளவில் காணப்படுவதால் காட்டெருமை, சிறுத்தை, புலி, மான், காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரிகின்றன. வனவிலங்குகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாலும், போதிய உணவு கிடைக்காததாலும் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி அவை ஊட்டி நகரையொட்டிய பகுதிகளில் உலா வருகின்றன. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டெருமை ஒன்று உலா வந்ததால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஊட்டி படகு இல்ல சாலையில் காட்டெருமை ஒன்று அவ்வப்போது உலா வந்து கொண்டு இருக்கிறது.

ஊட்டி நகரின் நடுவில் காபிஹவுஸ் ரவுண்டானா பகுதி உள்ளது. இங்கு பழைய அக்ரஹாரம் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான காலியிடம் இருக்கிறது. அங்கு உள்ள புல்வெளியில் காட்டெருமை ஒன்று படுத்து இருப்பதாக வனத்துறையினருக்கு நேற்று காலை தகவல் வந்தது. அதனை தொடர்ந்து உதவி வன பாதுகாவலர் சரவணன், வனச்சரகர் முத்துகிருஷ்ணன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது பசுமையாக நன்றாக வளர்ந்து இருந்த புற்களை மேய்ந்து விட்டு காட்டெருமை படுத்து ஓய்வு எடுப்பது தெரியவந்தது.

ஊட்டி நகரில் முக்கிய சாலையான கமர்சியல் சாலையையொட்டி உள்ள பகுதியில் காட்டெருமை இருந்ததால், அதனை அங்கிருந்து விரட்ட முடியவில்லை. பள்ளிகளுக்கு செல்லும் மாணவ–மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கமர்சியல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்ததால் காட்டெருமையை விரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் அந்த சாலையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

இதற்கிடையே காட்டெருமை எழுந்து புற்களை மேய்ந்தபடி நடந்தது. அப்போது பழைய அக்ரஹாரம் பகுதியில் உள்ள குடியிருப்பில் புகுந்தது. உடனே வனத்துறையினர் காட்டெருமையை குடியிருப்பில் இருந்து மீண்டும் அதே இடத்துக்கு விரட்டினர். ஊட்டியில் நேற்று பகலில் வெயில் அதிகமாக இருந்ததால், காட்டெருமை சோர்வாக காணப்பட்டது. அங்கு பழமையான ஒரு வீட்டின் முன்பு உள்ள நிழலில் நின்றிருந்த காட்டெருமை, ஜன்னலில் வைக்கப்பட்டு இருந்த காலி மதுபாட்டிலை மோந்து பார்த்தது. பின்னர் அங்கும், இங்கும் சுற்றித்திரிந்து புல்வெளியில் மீண்டும் படுத்துக்கொண்டது. காட்டெருமை உலா வந்ததால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை நேற்று மூடப்பட்டது. இதனால் அங்கு வந்த மதுபிரியர்கள் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் மாலையில் அந்த காட்டெருமை திடீரென வனத்துறையினரை நோக்கி ஆவேசம் காட்டியது. பின்னர் வனத்துறையினர் சத்தமிட்டதை தொடர்ந்து, மீண்டும் புற்களை மேய்ந்தது. இதனால் அந்த காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதுகுறித்து உதவி வனபாதுகாவலர் சரவணன் கூறியதாவது:–

ஊட்டியில் பெய்த தென்மேற்கு பருவமழையால் புல்வெளிகளில் நன்றாக புற்கள் வளர்ந்துள்ளன. ஸ்டேர் வங்கி லேன் சாலையில் புற்கள் அதிகமாக இருந்ததால், அதனை மேய்வதற்காக காட்டெருமை வந்து உள்ளது. அப்பகுதி மக்கள் விரட்டியதால் காபிஹவுஸ் ரவுண்டானா பகுதிக்கு வந்து, பழைய அக்ரஹாரத்தில் அசைபோட்டு விட்டு படுத்ததுள்ளது. ஊட்டி நகரில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், இரவு 10 மணிக்கு மேல் காட்டெருமையை தாவரவியல் பூங்காவை ஒட்டியுள்ள வனப்பகுதிக்குள் விரட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாலையில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது காட்டெருமை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்கிருந்து காட்டெருமையை விரட்ட முயன்றனர். ஆனால் அது அங்கேயே ஓய்வு எடுத்தது. பின்னர் சிலர் வாளிகளில் காட்டெருமைக்கு தண்ணீர் வைத்து உள்ளனர். மதியம் தாகம் எடுத்ததை அடுத்து காட்டெருமை தண்ணீர் குடித்தது. ஊட்டி நகரின் மையப்பகுதியில் காட்டெருமை உலா வந்த தகவல் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தெரிந்தது. அதனை தொடர்ந்து அப்பகுதிக்கு பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக காட்டெருமையை பார்க்க வந்தனர். இதையடுத்து வனத்துறையினர் மற்றும் போலீசார் அப்பகுதிக்குள் மக்களை நுழையவிடாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிலர் தங்களது வீட்டு மாடிகளில் இருந்து காட்டெருமையை வியப்புடன் பார்த்தனர். மேலும் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர்.


Next Story