மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கைதான தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
நெல்லையில் பள்ளிக்கூட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நெல்லை,
நெல்லை டவுனில் பாரதியார் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஜூலியட் ரவிச்சந்திரன் (வயது 48) தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவர் 8, 9-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவிகளின் பெற்றோர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம் புகார் செய்தனர். அவர், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவ்ஆனந்துக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து பாதுகாப்பு அலுவலர்கள், நெல்லை கல்வி மாவட்ட அலுவலர் ரேணுகா ஆகியோர் அந்த பள்ளிக்கூடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
மாணவிகளிடமும், ஆசிரியர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் தலைமை ஆசிரியர் ஜூலியட் ரவிச்சந்திரன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவ்ஆனந்த் நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் ஜூலியட் ரவிச்சந்திரனை கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜூலியட் ரவிச்சந்திரன் மீது நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, கலெக்டர் ஷில்பாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. உடனே அவர் ஜூலியட் ரவிச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்ய நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகனுக்கு பரிந்துரை செய்தார். அவருடைய பரிந்துரையை ஏற்று முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், நேற்று தலைமை ஆசிரியர் ஜூலியட் ரவிச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story