சிவகிரியில் கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் சாவு
சிவகிரியில் கிணற்றில் மூழ்கி பள்ளிக்கூட மாணவர் இறந்தார். நண்பர்களுடன் குளித்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
சிவகிரி,
நெல்லை மாவட்டம் சிவகிரி சந்தை பேட்டை தெருவை சேர்ந்தவர் அர்ச்சுணன் மகன் வினுசக்கரவர்த்தி (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.
நேற்றுமுன்தினம் வினுசக்கரவர்த்தி தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து சிவகிரிக்கு மேற்கே வழிவழி கண்மாய் அருகே உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் குளிக்க சென்றார்.
கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, வினுசக்கரவர்த்தி எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே அவர்கள் இதுகுறித்து வினுசக்கரவர்த்தியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை கேட்டதும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர். பின்னர் இதுகுறித்து சிவகிரி போலீசார் மற்றும் வாசுதேவநல்லூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கிணற்றில் இறங்கி வினுசக்கரவர்த்தியை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் மாணவரை தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது. இரவு முழுவதும் தேடியும் வினுசக்கரவர்த்தியை கண்டுபிடிக்கமுடியவில்லை.
தொடர்ந்து நேற்று மோட்டார் மூலம் தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றினர். அப்போது அங்கு வினுசக்கரவர்த்தி பிணமாக கிடந்தார். உடனே அவரது உடலை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர். வினுசக்கரவர்த்தியின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பர்களுடன் குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர், கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story