நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ஒரே ஊதிய விகிதத்தை வழங்க வேண்டும்


நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ஒரே ஊதிய விகிதத்தை வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 4 Sept 2018 4:00 AM IST (Updated: 4 Sept 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ஒரே ஊதிய விகிதத்தை வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திட்ட இயக்குனர் காளிதாசன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை, கல்விக் கடன், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 354 மனுக்களை அளித்தனர். இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கத்தினர் கொடுத்த கோரிக்கை மனுவில், தர்மபுரி மாவட்டத்தில் ஒன்றியத்திற்கு ஒன்றியம் மாறுபட்ட ஊதியத்தை மாற்றி ஒரே ஊதிய விகிதத்தை வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட பணியாளர் பதிவேட்டின்படி ஊதியம் நிர்ணயம் செய்து ரூ.5,136 ஊதியமாக வழங்க வேண்டும். நீர்த்தேக்கதொட்டி இயக்குபவர்களுக்கு நிலுவையில் உள்ள தொட்டி சுத்தம் செய்யும் தொகையை ஊதியத்துடன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

மூக்கனூர் ஊராட்சி, தின்னப்பட்டி, மட்டிகொட்டாயை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதன்மூலம் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக தண்ணீர் வினியோகிக்காமல் சில பகுதிகளுக்கு மட்டும் வினியோகிக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான கிராமமக்கள் தங்கள் பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு நடத்தி அனைவருக்கும் முறை வைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

பையர்நத்தத்தை சேர்ந்த மலர்க்கொடி குடும்பத்தினருடன் வந்து கொடுத்த மனுவில், எனக்கு சொந்தமான நிலத்தை மிரட்டி விலைக்கு வாங்க சிலர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் எங்கள் நிலத்தில் அத்துமீறி நுழைந்து தென்னங்கன்றுகளை வெட்டியும், எல்லை கற்களை பிடுங்கியும் தகராறில் ஈடுபடுகிறார்கள். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

Next Story