ஈரோடு நீரேற்று நிலையத்தில் பழுது: காவிரி ஆற்றில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் எடுக்க நடவடிக்கை
ஈரோடு நீரேற்று நிலையத்தில் பழுது ஏற்பட்டதால் காவிரி ஆற்றில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பணிகளை எம்.எல்.ஏ.க்கள் பார்வையிட்டனர்.
ஈரோடு,
ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு தேவையான குடிநீர் காவிரி ஆற்றில் இருந்து எடுத்து சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக ஈரோடு வைராபாளையம், பி.பி.அக்ரஹாரம் உள்பட பல்வேறு இடங்களில் தலைமை நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நீரேற்று நிலையங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் தண்ணீரை உறிஞ்ச முடியாத நிலை ஏற்பட்டதால் மாநகராட்சி பகுதியில் ஒரு வாரம் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் தற்காலிக குழாய்கள் அமைத்து காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டது.
காவிரி ஆற்றில் வெள்ளம் வடிந்த பிறகு நீரேற்று நிலையங்கள் வழக்கம்போல் செயல்பட தொடங்கின. ஆனால் வைராபாளையத்தில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்ட மின்மோட்டார்களில் மணல் அடைப்பு ஏற்பட்டதால் பழுது ஏற்பட்டது. எனவே அந்த நீரேற்று நிலையத்தில் மோட்டாரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து குழாய் மூலமாக தண்ணீரை உறிஞ்சி எடுக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இந்தநிலையில் நீரேற்று நிலையங்களை எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். அப்போது பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டறிந்தனர். மேலும், பணிகளை விரைந்து முடிக்கவும் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–
வைராபாளையம் பகுதியில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வீரப்பன்சத்திரம் பகுதி முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அங்கு காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் கரையோரம் உள்ள நீரேற்று தொட்டிக்கு வருகிறது. அங்கிருந்து நீரேற்றம் செய்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது கரையோரம் உள்ள நீரேற்று நிலையத்தை பயன்படுத்தி தண்ணீர் எடுக்கப்பட்டது. ஆனால் ஆற்றில் வெள்ளம் வடிந்ததால் ஆற்றங்கரையோரம் பிச்சைக்காரன்பள்ளம் ஓடையின் கழிவுநீர் வந்து கலக்கிறது. எனவே கரையோரம் உள்ள நீரேற்று நிலையத்தில் உள்ள தண்ணீரை எடுக்க முடியாது. இதைத்தொடர்ந்து ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ஆற்றில் தண்ணீரின் இழுவை அதிகமாக இருப்பதால் நீரேற்று நிலையத்தை இயக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து ஆற்றில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து புதிய குழாய் அமைத்து தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஆற்றில் செல்லும் தண்ணீரின் இழுவை குறைந்ததும் நீரேற்று நிலையங்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் விஜயகுமார், சண்முகவடிவு, அ.தி.மு.க. பகுதி செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் உடனிருந்தனர்.